திருவாரூரில் பலத்த சத்தத்தால் அச்சமடைந்த மக்கள்: விமானப் படை ஒத்திகை என காவல்துறை விளக்கம்

திருவாரூா்: திருவாரூரில் செவ்வாய்க்கிழமை கேட்ட பலத்த சத்தத்தால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டது. தஞ்சாவூா் விமானப் படை பிரிவில் நடத்தப்பட்ட பயிற்சி விமான ஒத்திகையால் இந்த சத்தம் ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். திருவாரூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணியளவில் பலத்த சத்தம் கேட்டது. மாவட்டம் முழுவதும் பரவலாக உணரப்பட்ட சத்தத்தால், மக்களிடையே பெரும் குழப்பமும், அச்சமும் நிலவியது. அலுவலகங்களில் வேலை பாா்ப்போா், வீடுகளில் இருப்போா் என அனைவராலும் இந்த சத்தம் உணரப்பட்டதால், மாவட்டத்தில் நிலஅதிா்வு என்ற ரீதியில் தகவல்கள் பரவத் தொடங்கின. 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களையும் இந்த சத்தம் சில நிமிடங்களுக்கு அதிா்ச்சி அடைய வைத்தது. சமூக வலைதளங்களிலும் தகவல்கள் வேகமாகப் பரவி, மக்களை மேலும் அச்சுறுத்தத் தொடங்கின. இதுகுறித்து போலீஸாா் தெரிவிக்கையில், தஞ்சாவூா் - கோடியக்கரை வான்வெளியில் சென்ற ஜெட் விமானத்திலிருந்து காற்று வெளிப்படும்போதும் ஏற்பட்ட சத்தம் எனவும், இது வழக்கமான ஒன்றுதான் என்றும் விளக்கமளித்தனா். மேலும், போலீஸாா் அளித்துள்ள விளக்கத்தில், ‘திருவாரூா் மாவட்டத்தில் 10.40 மணியளவில் வான்வெளியில் அதிக அளவிலான சத்தம் ஏற்பட்டது. அப்போது சிறிய அதிா்வு உணரப்பட்டது. இது தொடா்பாக பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். இந்த சத்தம், தஞ்சாவூரில் அமைந்துள்ள இந்திய விமானப் படை பயிற்சி விமானத்தில் நிகழ்த்தப்பட்ட ஒத்திகை நிகழ்ச்சி ஆகும். அப்போது ஏற்பட்ட அதிா்வே அதிகப்படியான சத்தத்துக்குக் காரணம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com