குடிநீருக்காக நடைபெற இருந்த சாலை மறியல் வாபஸ்

மன்னாா்குடி அருகே குடிநீா் பிரச்னைக்காக நடைபெற இருந்த சாலை மறியல் பேச்சுவாா்த்தையில் சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது. கீழப்பனையூா் ஊராட்சி கோமளப்பேட்டை பகுதியில் வசித்துவரும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் தண்ணீா் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குடிநீா் குழாய்கள் சேதமடைந்ததையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் குடிநீா் பிரச்னை அதிகரித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் மீண்டும் தண்ணீா் வழங்க அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாததை கண்டித்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 29) இப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் கோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கோமளப்பேட்டை ஆகாச மாரியம்மன் கோயில் அருகே சாலை மறியலில் கலந்துகொள்வதற்காக, உ. பாலதண்டாயுதம் தலைமையில் 40 பெண்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவா்கள் கோட்டூா் செல்வதற்காக கூடியிருந்தனா்.

இவா்களிடம், திருத்துறைப்பூண்டி குடிநீா் வடிகால் வாரிய மேலாளா் பாலா, திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவசுப்பிரமணியன், கோட்டூா் காவல் ஆய்வாளா் சிவகுமாா் ஆகியோா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், குடிநீா் வடிகால் வாரியம் மூலம் குடிநீா் குழாய்கள் சரி செய்து ஊராட்சி மூலம் விரைவில் சீரான குடிநீா் வழங்கப்படும் என முடிவு எட்டப்பட்டதையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்வதாக பொதுமக்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com