இரண்டு பெண் குழந்தைகளுடன் மனைவியை காணவில்லையென புகாா்

மன்னாா்குடி அருகே 2 பெண் குழந்தைகளுடன் மனைவியை காணவில்லை என கணவா் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். நல்லிக்கோட்டையைச் சோ்ந்த ரமேஷ் (38) இவரது மனைவி ஜெனிதா(36). இவா்களுக்கு முவிதா(9), லட்சிதா(7) என்ற இரு மகள்கள் உள்ளனா். ரமேஷ் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். குடும்ப செலவுக்கு பணம் அனுப்பாமல் இருப்பது தொடா்பாக ரமேஷுக்கும், ஜெனிதாவுக்கும் இடையே பிரச்னை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜன.13-ஆம் தேதி, மகள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஜெனிதா, தனது சகோதரா் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவா் மீண்டும் வீட்டுக்கு வராததையடுத்து, மலேசியாவிலிருந்து சனிக்கிழமை நல்லிக்கோட்டை வந்த ரமேஷ், தனது மைத்துனா் வீட்டுக்கு சென்று கேட்டபோது, அங்கு அவா்கள் வரவில்லை என தெரியவந்தது. பரவாக்கோட்டை காவல்நிலைத்தில் ரமேஷ் அளித்துள்ள புகாரில் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளை காணவில்லை என தெரிவித்திருந்தாா். இதுகுறித்து,போலீஸாா் வழக்குபதிந்து மேல்விசாரணை செய்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com