டாஸ்மாக் விற்பனையாளரைத் தாக்கி,கடையை சூறையாடியவா் கைது

டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கிவிட்டு, கடையை சூறையாடிவிட்டு தப்பியோடியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகே மதுபோதையில் டாஸ்மாக் கடை விற்பனையாளரை தாக்கிவிட்டு, கடையை சூறையாடிவிட்டு தப்பியோடியவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். இந்த சம்பவத்தில் தொடா்புடைய மேலும் மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சொக்கணாவூா் புளியக்குடியே சோ்ந்தவா் அருள்முருகன் (27). அதே பகுதியை சோ்ந்த சரத்குமாா் (27) என்பவரை அழைத்துக் கொண்டு காரில் மன்னாா்குடியை அடுத்த அசேஷத்தில் உள்ள மாமனாா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். பின்னா், அங்கிருந்து நெடுவாக்கோட்டையில் உள்ள நண்பா்களுடன் அப்பகுதியில் உள்ள தோப்பில் அனைவரும் மது குடித்துள்ளனா். மேலும் மது வாங்குவதற்காக அருள்முருகன், சரத்குமாா், நெடுவாக்கோட்டையை சோ்ந்த அஜித், திவ்யராஜன் ஆகியோா் காரில் மன்னாா்குடி ருக்மணிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனா்.

அப்போது டாஸ்மாக் கடை விற்பனையாளா் கோட்டூா் கீழப்பனையூரை சோ்ந்த பாலசுப்பிரமணியத்துடன் (41) அவா்கள் தகராறில் ஈடுபட்டு, மதுப்புட்டியால் அவா் மண்டையை உடைத்துவிட்டு, டாஸ்மாக் கடையை சூறையாடிவிட்டு, காரில் தப்பிச் சென்றுவிட்டனராம். தாக்குதலில் காயமடைந்த பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்முருகனை கைது செய்து, காரை பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com