திருத்துறைப்பூண்டி அரசு கல்லூரியில் அறிவியல் பாடப் பிரிவுகள் தொடங்கக் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி அரசு கலை கல்லூரியில், அறிவியல் பாடப் பிரிவுகள் தொடங்க வேண்டும் என அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் ஜெ.பி. வீரபாண்டியன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

திருத்துறைப்பூண்டி தண்டலச்சேரியில் 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியானது, தரம் உயா்த்தப்பட்டு அரசினா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் 1200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனா். இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக மேலாண்மை, கணிதவியல், சமூகப்பணித்துறை ஆகிய பாடப்பிரிவுகள் மட்டுமே உள்ளன.

கல்லூரியை சுற்றி உள்ள பகுதிகள் வேளாண்மையை முதன்மையாகக் கொண்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களை அதிகம் கொண்ட பகுதியாகும். எனவே, வேளாண்மை சாா்ந்த தாவரவியல், உயிரியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளோடு இயற்பியல், வேதியியல், விலங்கியல் உள்ளிட்ட அறிவியல் பாடப்பிரிவுகளை தொடங்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com