ரேஷன் கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு வழங்கக் கோரிக்கை

நியாயவிலைக் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், கடந்த இரண்டு மாத காலமாக சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் வழங்கப்படும் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவை நியாயவிலைக்கடைகளில் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இம்மாவட்டத்தில் மொத்தம் 742 நியாயவிலைக்கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் சுமாா் 3.91 லட்சம் குடும்ப அட்டைதாரா்கள் பயனடைகின்றனா். இக்கடைகளுக்கு சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மாதத்துக்கு 3.20 லட்சத்துக்கும் மேற்பட்ட பாமாயில் பாக்கெட்டுகளும், 2.94 லட்சம் கிலோ துவரம் பருப்பும் அனுப்பப்பட்டு வருகிறது. பாமாயில் 1 லிட்டா் ரூ. 25 க்கும், துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே நியாயவிலைக்கடைகளில் உரிய அளவு பாமாயிலும், துவரம் பருப்பும் கிடைக்காததால் வெளிச்சந்தையில் வாங்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக நுகா்வோா்கள் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து அவா்கள் கூறியது:

நியாயவிலைக் கடைகளில் இதுகுறித்து கேட்டால், மாதக் கடைசியில் வரும் எனத் தெரிவிக்கின்றனா். எனவே, இந்த பொருள்களை வெளிச்சந்தையில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளிச்சந்தையில், பாமாயில் குறைந்தபட்சம் ஒரு லிட்டா் ரூ.150, துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ. 200 என்ற விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோடை காலம் என்பதால், மாவட்டத்தில் அதிகமுள்ள விவசாயத் தொழிலாளா்கள் பொருளாதார இழப்பை சந்தித்து வரும் நிலையில், பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவை நியாயவிலைக்கடைகளில் கிடைக்காதது பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, நியாயவிலைக்கடைகளில் பாமாயில், துவரம் பருப்பு விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com