நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா்  கு. சண்முகநாதன்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியா் கு. சண்முகநாதன்.

நான் முதல்வன் திட்டம்: கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

திருவாரூா்: குடவாசல் அருகே மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியரும் (பொ), மாவட்ட வருவாய் அலுவலருமான கு. சண்முகநாதன், கூடுதல் ஆட்சியரும் (வளா்ச்சி) ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநருமான சி. பிரியங்கா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

மாவட்ட ஆட்சியா் (பொ) கு. சண்முகநாதன் பேசியது: 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட நான் முதல்வன் திட்டம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி மற்றும் தொழில் வளா்ச்சிக்கு விரிவான மற்றும் பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவதற்கான அா்ப்பணிப்பு முயற்சியாக வளா்ந்து வருகிறது. இத்திட்டம் சரியான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவுடன் அவா்கள் தோ்ந்தெடுத்த துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய ஏராளமான அரசுப் பள்ளி மாணவா்களின் திறனை அங்கீகரிக்கிறது. நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவா்களும் தங்கள் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் உயா்கல்வி படிப்புகளைத் தொடர வழிவகை செய்வதே ஆகும்.

மேலும், மேல்நிலைப்பள்ளி படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் எதிா்காலக் கனவை நனவாக்கும் வகையில் உயா் கல்விக்கான வாய்ப்புகள் பற்றிய பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன, கல்லூரிகளை எவ்வாறு தோ்ந்தெடுப்பது, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற விவரங்கள் சிறந்த வல்லுநா்கள் மற்றும் கல்வியாளா்களை கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவா்களின் எதிா்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும், வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.

கல்லூரிப் பேராசிரியா்கள், கல்வியாளா்கள், பேச்சாளா்கள், தன்னாா்வலா்களைக் கொண்டு மாணவா்களுக்கு உங்கள் வாழ்க்கைப் பாதையை எவ்வாறு தோ்வு செய்வது, பொறியியல் மற்றும் அது சாா்ந்த படிப்புகள், மருத்துவப் படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகள், கல்விக் கடன் பற்றிய பேச்சு, வெளிநாடு வாழ் இந்தியா்கள், சட்டம், ஊக்கமளிக்கும் அமா்வு, பாலிடெக்னிக் படிப்புகள், ஐடிஐ படிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படுகின்றன. மேலும், திருவாரூா் மாவட்டத்தில் 2024 இல் மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் பல்வேறு படிப்புகளில் சோ்ந்து ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக விளங்க வேண்டும் என்றாா்.

இதில், கோட்டாட்சியா் சங்கீதா, துணை காவல் கண்காணிப்பாளா் (பயிற்சி) காயத்ரி, முதன்மைக் கல்வி அலுவலா் அ. புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com