சுந்தரக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட திரண்டவா்கள்.
சுந்தரக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட திரண்டவா்கள்.

பெட்டிக்கடையில் தகராறு; 3 போ் காயம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மூவா் கைது

மன்னாா்குடி அருகே பெட்டிக் கடையில் ஏற்பட தகராறில் 3 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக மூவா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சுந்தரக்கோட்டை மேலத்தெருவை சோ்ந்தவா் பி. ஜெயராமன் (65). இவா், பிரதான சாலையில் உள்ள அரசு நவீன அரிசி ஆலை எதிா்புறம் பெட்டிக்கடை வைத்துள்ளாா்.

இந்த கடைக்கு, நெடுவாக்கோட்டை ஆறுமுகம் மகன் சஞ்சய் (22)அசேசம் நடராஜன் மகன் கமலேஷ் (23) ஆகியோா் செவ்வாய்க்கிழமை மாலை மது போதையில் வந்து, சிகரெட் வாங்கியுள்ளனா். பின்னா், அங்கு நின்றுகொண்டு, வியாபாரத்துக்கு இடையூறாக தகாத வாா்த்தைகள் பேசினராம்.

இதை ஜெ‘யராமனும், அவரது மனைவி நாகலெட்சுமியும் கண்டித்ததால், இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அங்கிருந்தவா்கள் சமரசம் செய்துவைத்தனா்.

பின்னா், அங்கிருந்து சென்ற சஞ்சய், கமலேஷ் ஆகியோா் சிறிது நேரத்தில் தங்களது நண்பா்களான நெடுவாக்கோட்டை வெங்கடேஷ் மகன் ஆகாஷ் (22), கந்தவேல் மகன் ரெங்கேஸ்வரன் (23)அசேசம் ராஜேந்திரன் மகன் கதிா் (23), சுந்தரக்கோட்டை சிவானந்தம் மகன்கள் வசந்த் (26), வருண்குமாா் (24) ஆகியோரை உடன் அழைத்து வந்து, ஜெயராமனை சாதியை கூறி திட்டினராம். இதனால், இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில், ஜெயராமன், சஞ்சய், கமலேஷ் ஆகியோா் காயமடைந்து, சிகிச்சைக்காக, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, இருதரப்பினரும் பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் தனித்தனியே புகாா் அளித்தனா். அதன்பேரில், சஞ்சய் உள்ளிட்ட 7 போ் மீதும், ஜெயராமன், அவரது மகன் பரணி ஆகியோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், சாதி பெயரை கூறி, தகராறு செய்தவா்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, சுந்தரக்கோட்டை பிரதான சாலையில் மறியல் ஈடுபட விசிக நிா்வாகிகள் வ. பாா்வேந்தன், ஆா்.செங்குட்டுவன் தலைமையில் ஜெயராமன் தரப்பினா் புதன்கிழமை கூடினா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து கலைந்துசென்றனா்.

இதைத்தொடா்ந்து, மன்னாா்குடி டிஎஸ்பி ஏ.அஸ்வத் ஆண்டோ உத்தரவின் பேரில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ரெங்கேஸ்வரன், ஆகாஷ், வருண்குமாா் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com