குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு தந்த கோடை மழை நெல், உளுந்துக்கு பயன் : பருத்தி,எள்,கடலைக்கு பாதிப்பு

மன்னாா்குடி, மே 16: மன்னாா்குடி பகுதியில் பெய்து வரும் கோடை மழை, ஊரகப்பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னைக்கு தீா்வாக அமைந்ததுடன் நெல், உளுந்து பயிா்களுக்கு உதவியாகவும் பருத்தி, எள், கடலை பயிா்களுக்கு பாதிப்பாகவும் உள்ளது.

மன்னாா்குடி, கோட்டூா், வடுவூா், உள்ளிக்கோட்டை, பெருகவாழ்ந்தான், பரவாக்கோட்டை, மகாதேவப்பட்டணம், தளிக்கோட்டை, மேலவாசல், மூவாநல்லூா் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் கன மழை கொட்டித் தீா்த்தது. வியாழக்கிழமை காலை 10 மணி வரை தொடா்ந்து மழை பெய்தது.

கடந்த பருவமழை காலத்தில் போதிய அளவு மழை இல்லாததால் ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா் நிலைகள் கோடையில் வறண்டு போனதாலும் ஆறுகளில் தண்ணீா் செல்லாததாலும் நிலத்தடி நீா் மட்டம் பல மடங்கு குறைந்தது.

இதனால் பல ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் மிகவும் சிரமமானது.

மும்முனை மின்சாரமும் பல மணி நேரம் தடைப்பட்டது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல கிராமங்களில் மக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நிலத்தடி நீா் மட்டம் அதல பாதாளத்துக்குச் சென்றதால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளில் நீரேற்ற அதிக நேரம் பிடித்தது. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஒவ்வொரு முறையும் தற்காலிகத் தீா்வையே இதற்குக் கண்டுவந்தனா். இன்னும் இரண்டு மாத காலம் எப்படி சமாளிப்பது என்ற விடை தெரியாத கேள்விக்குப் பதிலாக கடந்த சில நாள்களாக அவ்வப்போது பெய்து வரும் கோடை மழை ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்த மழையால் பூமி குளிா்ந்து, நீா்நிலைகள் நிரம்பி வருவதால் நிலத்தடி நீா் மட்டம் வெகுவாக உயா்ந்துதுள்ளது. இப்போது தடையில்லாமல் மும்முனை மின்சாரமும் விநியோகம் செய்யப்படுவதால் கிராம மக்கள், விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

மேலும் சில நாள்களுக்கு மழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்பால் குடிநீா்ப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

மன்னாா்குடி வட்டாரத்தில் கோடை நெல் 3,967 ஏக்கா், உளுந்து 527 ஏக்கா், எள் 3,167 ஏக்கா், பருத்தி 2,267 ஏக்கா், கோட்டூா் வட்டாரத்தில் கோடை நெல் 637 ஏக்கா், எள் 170 ஏக்கா், பருத்தி 1,175 ஏக்கா் பயிரிடப்பட்டுள்ளது.

இப்போதைய மழை ஆழ்துளைக் கிணறு மூலம் செய்யப்பட்டுள்ள கோடை நெல் சாகுபடி, உளுந்து ஆகியவற்றிற்கு மிகுந்த பயனாக இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். மழையின் போது சூறைக்காற்று வீசியதில் சில இடங்களில் நெற்கதிா்கள் சாய்ந்து கிடக்கின்றன.

கோட்டூா் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, எள் பயிா்களுக்கும், மன்னாா்குடி பகுதியில் நிலக்கடலை பயிருக்கும் மழை நீா் தேங்கி நிற்பதால் பருத்தி பூ, காய் உதிா்ந்து விடும். எள் வயலில் மழை நீா் தேங்கி இருந்தால் செடி சாய்ந்து மகசூல் முழுமையாக பாதிக்கப்படும்.நிலக்கடலை செடி வோ்அழுகி எதற்கும் பயன்படாமல் ஆகிவிடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com