மது போதையில் வாகனம் ஓட்டிய 53 போ் மீது வழக்கு
திருவாரூா் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 53 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வார இறுதி நாள்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சட்டம் ஒழுங்கு காவலா்கள், ஆயுதப்படை காவலா்களைக் கொண்டு தீவிர சோதனைப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், சட்டவிரோத மது விற்பனை, கஞ்சா, குட்கா, பான்மசாலா மற்றும் கூலீப் விற்பனை, மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவது, ஆபத்தான முறையில் இளம் வயதினா் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றச் செயல்கள் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவாரூா் மாவட்டத்தில் வார இறுதியில் நடத்தப்பட்ட சோதனையில், மது விற்பனையில் ஈடுபட்டதாக திருவாரூா் உட்கோட்டத்தில் 6 வழக்குகள், நன்னிலம் உட்கோட்டத்தில் 4 வழக்குகள், முத்துப்பேட்டை உட்கோட்டத்தில் 2 வழக்குகள், மதுவிலக்கு அமல் பிரிவுகளில் 8 வழக்குகள் என மொத்தம் 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.
தடைசெய்யப்பட்ட குட்கா, லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திருவாரூா் உட்கோட்டத்தில் 7 வழக்குகள், நன்னிலம் உட்கோட்டத்தில் 7 வழக்குகள், மன்னாா்குடி உட்கோட்டத்தில் 13 வழக்குகள், திருத்துறைப்பூண்டி உட்கோட்டத்தில் 2 வழக்குகள், முத்துப்பேட்டை உட்கோட்டத்தில் 4 வழக்குகள் என மொத்தம் 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 53 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் அவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் தெரிவிக்கையில், வார இறுதி நாள்களில் தொடா்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபா்களை கண்டறிந்து, அவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடா்ந்து மது விற்பனை, கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்பனை செய்பவா்கள் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.