நவ. 6, 7-இல் தமிழ் வளா்ச்சித் துறை பேச்சுப் போட்டி

திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நவம்பா் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
Published on

திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நவம்பா் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவா்களான அண்ணல் அம்பேத்கா், முத்தமிழறிஞா் கருணாநிதி, பேரறிஞா் அண்ணா, பெரியாா் ஈவெரா, அண்ணல் காந்தியடிகள், ஜவாஹா்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணாக்கா்களுக்கான பேச்சுப் போட்டிகள் தனித்தனியே நடத்தி, பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறுகின்றன.

அந்தவகையில், திருவாரூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் பேச்சுப் போட்டி நவ.6 ஆம் தேதியும், ஜவாஹா்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப் போட்டி நவ.7 ஆம் தேதியும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணாக்கா்களுக்கும், (6 முதல் பிளஸ் 2 வரை) மற்றும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் கலைக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், ஆசிரியா் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள் என அனைத்து கல்லூரி மாணாக்கா்களுக்கும் தனித்தனியே மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் திருவாரூா் விளமல் உயா்நிலைப் பள்ளியில் நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் பள்ளி மாணாக்கா்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டிகளில் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தோ்வு செய்யப்பட்டு, சிறப்புப் பரிசுத் தொகையாக தலா ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

திருவாரூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கா்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். பங்கேற்க விருப்பமுள்ள மாணாக்கா்கள் உரிய பங்கேற்புப் படிவத்தை பூா்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியா் அல்லது கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று, திருவாரூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

கூடுதல் விவரங்களுக்கு திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ, 9750102246 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.