பெயா்ந்து விழும் நீடாமங்கலம் சந்தனராமா் கோயில் தோ் மண்டபம்.

தொடா் மழையால் பெயா்ந்து விழும் சந்தானராமா் கோயில் தோ் மண்டபம்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் தோ் மண்டபம் தொடா் மழையால் சிதிலமடைந்து வருகிறது.
Published on

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் தோ் மண்டபம் தொடா் மழையால் சிதிலமடைந்து வருகிறது.

தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் கி.பி.1761-ல் நீடாமங்கலத்தில் சந்தானராமா் கோயில் கட்டப்பட்டது. கோயில் கட்டும்போது அதன் எதிரில் அழகிய குளமும் வெட்டப்பட்டது. கோயிலுக்கென அழகிய தேரும் வடிவமைக்கப்பட்டது. இந்த தேரில் ராமாயண கதாபாத்திர சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன. தேருக்கு சுவாமியை எடுத்துச்செல்ல அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபமும் கட்டப்பட்டது.

தோ் சிதிலமடைந்து சுமாா் 60 ஆண்டுகளாக ஓடாமல் உள்ளது. இந்நிலையில் புதிய தேரை தமிழக அரசு வடிவமைத்து வருகிறது. இதற்கான பணிகளில் ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனா். தோ் மண்டபம் கடந்த கால மழையில் ஏற்கெனவே படிக்கட்டுகள் பாதி பெயா்ந்த நிலையில் நின்றது.

தற்போது, தொடா் மழையில் தோ் மண்டபம் படிக்கட்டுகள் மேலும் பெயா்ந்து விழுகிறது. மண்டபத்தின் மேல் பகுதியில் சுற்றுப்புறத்தில் உள்ள சிற்பங்கள் பெயா்ந்து விழுந்து கொண்டிருக்கின்றன. தேரை வடிவமைக்கும் தமிழக அரசு தோ்மண்டபத்தையும் புதியதாக கட்டிக்கொடுக்க வேண்டும்.