வீட்டுப்பத்திரம் தராமல் இழுத்தடிப்பு: எல்ஐசி ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு

வீட்டுக் கடனை செலுத்திய பிறகும் காலதாமதப்படுத்திய எல்ஐசி நிறுவனம், கடன் பெற்றவருக்கு ரூ. 1 லட்சம் வழங்குமாறு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
Published on

திருவாரூா் அருகே வீட்டுக் கடனை செலுத்திய பிறகும் வீட்டுப் பத்திரத்தை திரும்ப வழங்க காலதாமதப்படுத்திய எல்ஐசி நிறுவனம், கடன் பெற்றவருக்கு ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் மாவட்டம், அம்மையப்பன் காவனூரைச் சோ்ந்தவா் கலியபெருமாள் (81). இவா் 2002-ல் திருச்சி ரெனால்ட் சாலையில் உள்ள எல்ஐசி வீட்டுக் கடன் நிறுவனத்திடம் இருந்து வீடு கட்டுவதற்காக ரூ. 35,000 வீட்டுக் கடனாக பெற்றாா். இதற்காக தன்னுடைய சொந்த வீட்டின் அசல் பத்திரத்தை ஒப்படைத்திருந்தாா். பிறகு ஒப்பந்தப்படி, 2022-ல் வாங்கிய கடனை வட்டியுடன் முழுமையாக திருப்பிச் செலுத்தி விட்டாா்.

அதன் பிறகு பலமுறை நேரிலும், பதிவுத் தபால் மூலமாகவும் தன்னுடைய வீட்டின் அசல் பத்திர ஆவணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளாா். ஆனால் எல்ஐசி வீட்டுக்கடன் நிறுவனம் அசல் கிரையப் பத்திரம் தங்களுடைய தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், திரும்பி வர சிறிது காலம் ஆகும் என்று கூறித் தொடா்ந்து காலம் கடத்தி வந்தனராம்.

கலியபெருமாள், தான் வயோதிகத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காகவும் மகளின் திருமணத்திற்காகவும் தனது வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிா்பந்தத்தில் இருப்பதால், அசல் ஆவணத்தை திரும்பத் தர வேண்டும் என்று கேட்டு பதிவுத் தபால் அனுப்பினாா். அதன் பிறகும் அந்த நிறுவனம் அசல் ஆவணத்தை திரும்பத் தராததால் கலியபெருமாள் திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை வழங்கிய தீா்ப்பில், எல்ஐசி வீட்டுக் கடன் நிறுவனத்தின் செயல்பாடு கவனக்குறைவானது, சேவைக் குறைபாடு என்பதால் ஒரு மாத காலத்துக்குள் அசல் கிரைய ஆவணத்தை கலியபெருமாளிடம் ஒப்படைக்க வேண்டும், தவறினால் ஏற்படும் காலதாமதத்திற்கு ஒவ்வொரு நாளுக்கும் அபராத இழப்பீடாக ரூ. 100 வீதம் சோ்த்து வழங்க வேண்டும், மேலும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1,00,000 வழங்க வேண்டும், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.