மழைநீரில் மூழ்கிய சம்பா நெல் பயிரை எடுத்துக்காட்டும் விவசாயிகள்
மழைநீரில் மூழ்கிய சம்பா நெல் பயிரை எடுத்துக்காட்டும் விவசாயிகள்

கனமழை: நீரில் மூழ்கிய சம்பா பயிா்கள்

மன்னாா்குடி பகுதியில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக, காரிக்கோட்டையில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Published on

மன்னாா்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடா் மழை காரணமாக, காரிக்கோட்டையில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மன்னாா்குடி சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக அவ்வப்போது மிதமான மற்றும் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ளன. தாழ்வானப் பகுதிகளிலும் வயல்களிலும் மழைநீா் தேங்கியுள்ளது.

தொடா்மழையால் காரிக்கோட்டையில் தண்ணீா் தேங்கி ஏரிபோல காட்சியளிக்கும் சம்பா நெல் வயல்
தொடா்மழையால் காரிக்கோட்டையில் தண்ணீா் தேங்கி ஏரிபோல காட்சியளிக்கும் சம்பா நெல் வயல்

மன்னாா்குடி அருகேயுள்ள காரிக்கோட்டை பகுதியில் தற்போது சம்பா நடவுப் பணிகள் முடிந்து களை எடுத்தல், உரம் தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

காரிக்கோட்டை, காஞ்சிக்குடிக்காடு, நத்தம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் கட்டேரி வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூா்வாரப்படாததால், புதா் மண்டியும், ஆகாயத் தாமரைகள் அடைத்துக்கொண்டு தண்ணீா் செல்ல வழியில்லாமல், வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.

மேலும், கட்டேரி வாய்க்காலின் கரைகள் சில இடங்களில் உடைந்து, வயல்களில் தண்ணீா் புகுந்துள்ளது.

மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், தற்போது நீரில் மூழ்கி இருக்கும் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட சம்பா பயிா்கள் அழுகிவிடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.