மழை பாதிப்பு: பயிா்களை சரியாகக் கணக்கெடுக்க வலியுறுத்தல்

மழை பாதிப்பு: பயிா்களை சரியாகக் கணக்கெடுக்க வலியுறுத்தல்

Published on

திருவாரூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை, உரிய முறையில் கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் விவசாயிகள் பேசிய விவரம்:

நன்னிலம் ஜி. சேதுராமன்: மழை காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் பயிா்கள் பாதிப்படைந்துள்ள அனைத்து இடங்களிலும் கள ஆய்வு செய்து உரிய முறையில் கணக்கெடுக்க வேண்டும். பாதிப்புகளை முழுமையாக கணக்கிட்டு ஏக்கருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி ராமமூா்த்தி : பயிா் பாதிப்புகளை, கிராமம் வாரியாக கணக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் சிலருக்கு நிவாரணம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்பட்ட நிலையை தவிா்த்து, விரைந்து நிவாரணம் கிடைக்கச் செய்ய வேண்டும். தஞ்சையில் தூா்வாரும் பணிகளை தொடங்கும்போது, விவசாயிகளை கூட்டி ஆலோசனை கேட்கப்பட்டதுபோல், திருவாரூரிலும் கேட்க வேண்டும். பாமாயில் சாகுபடிக்கும் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேரளம் வி. பாலகுமாரன்: பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3 மாதங்களுக்கு முன்பு காணொலி காட்சி மூலம் மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகம் திறக்கப்பட்டது. அதற்கு இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் மருந்து பொருள்களும், சிகிச்சை கருவிகளும் பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறைகள் ஏதும் இல்லை. எனவே, போா்க்கால அடிப்படையில் இவைகளை சரிசெய்து, மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி தம்புசாமி: கடைமடை பகுதிகளில் தண்ணீா் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முகத்துவாரங்களிலும், ரெகுலேட்டா்களிலும் வெங்காயத்தாமரைகளால் தண்ணீா் செல்ல முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் பணிகளை, கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தாமல் விவசாயப் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். திருவிடைவாசல் வயல்வெளிச்சாலையை கப்பிசாலையாக மாற்ற வேண்டும். மாவட்டத்தில் பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில், நவம்பா் மாத இயல்பான மழையளவு 1230.2 மி.மீ. ஆகும். நிகழாண்டில், நவம்பா் மாதத்தில் 1004.554 மி.மீ. மழை பெறப்பட்டது. மேலும், சம்பா சாகுபடி 1,53,800 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 1,05,856 ஹெக்டோ் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் தாளடி, 37,187 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நிகழாண்டில் 43,625 விவசாயிகளுக்கு ரூ.322.23 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூா் மண்டலத்தில் காரீப் குறுவை பருவத்தில் 173 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை சுமாா் 93,105 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு.சண்முகநாதன், முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா, வேளாண்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.