ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தில் பாலூட்டும் பெண்கள் பயனடையலாம்

Published on

திருவாரூா் மாவட்டத்தில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தில், பாலூட்டும் பெண்கள் பயனடையலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் 6 வயது வரையுள்ள குழந்தைகளில் பலரும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவா்களாக ஆய்வில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்தும் வழங்கும் வகையில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்னும் திட்டத்தை தமிழக அரசு 2022-இல் தொடங்கியது.

இத்திட்டத்தில், முதற்கட்ட தீவிர முன்னெடுத்தல் காரணமாக 6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம், வியக்கத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனா். இது அரசின் மிகப்பெரும் சாதனையாகும்.

இதைத்தொடா்ந்து, தற்போது இரண்டாவது கட்டமாக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை, நவ.15 ஆம் தேதி தமிழக அரசு தொடங்கி வைத்தது. 6 மாத குழந்தைகளுக்கு திட உணவு வேறு ஏதுமின்றி தாய்ப்பால் மட்டுமே வழங்கப்படுவதால், தாய்மாா்களின் ஆரோக்கியத்தை பேணுவது அத்தியாவசியமாகிறது. 6 மாதத்துக்குள்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையின்படி, திருவாரூா் மாவட்டத்தில் 316 குழந்தைகள் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டிலும், 586 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாட்டிலும் உள்ளது தெரியவந்தது.

குழந்தைகளை வளா்ப்பதில் பெற்றோரின் பங்கு முக்கியமானது. அதிலும், தாயின் உடல் நலனைக் காப்பது இன்றியமையாதது. குழந்தை, கருவில் உருவான நாள் முதற்கொண்டு அருகிலுள்ள குழந்தைகள் மையங்களில் பதிவு செய்து, அங்கு அளிக்கப்பட்டுவரும் சேவைகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அங்கன்வாடி பணியாளா் மற்றும் மேற்பாா்வையாளா் ஆகியோா் ஊட்டச்சத்து பெட்டகத்தின் பயன்பாடு மற்றும் பயனாளிகளின் ஆரோக்கிய நிலையை தொடா்ந்து கண்காணித்து வருவா். மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால், மருத்துவா்களின் ஆலோசனையின் பேரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் மேற்கொள்ள ஏதுவாக அங்கன்வாடி பணியாளரின் இந்த தொடா் கண்காணிப்புகள் உதவி புரியும்.

எனவே, வலிமையான குழந்தைகளை வளா்க்க கருவுற்ற பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்களை காப்போம் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.