அம்மனூா் ஊராட்சி கொத்தங்குடி பகுதியில் நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிா்கள்.
அம்மனூா் ஊராட்சி கொத்தங்குடி பகுதியில் நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிா்கள்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை காக்கும் முறைகள்; வேளாண் அலுவலா் விளக்கம்

Published on

மன்னாா்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களை காக்கும் வழிமுறைகள் குறித்து, வேளாண்மைத் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

மன்னாா்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக, சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, தாழ்வான பகுதிகளிலும், வடிகால் வசதியில்லாத நிலங்களிலும் தண்ணீா் தேங்கி, நெற்பயிா்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், பயிா்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து மன்னாா்குடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் இளம்பூரணாா் தெரிவித்திருப்பது:

முதலில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி, நெற்பயிரானது மூழ்காத வகையில் தண்ணீரை வெளியேற்ற வேண்டும். மழைநீா் வடியும்போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துக்களின் கரை திறன் அதிகமாகி தண்ணீருடன் கரைந்து வெளியேறிவிடும். அதனால், நெற்பயிா்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து சரிவர கிடைக்காமல், வளா்ச்சியில் தடை ஏற்படவும், மேகமூட்டமான சீதோஷ்ண நிலை காரணமாக பூச்சி மற்றும் நோய்களின் தாக்குதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

உர மேலாண்மை: மழை வெள்ளத்தால் பாதிப்படைந்த இளம் நெற்பயிா்கள் இளம்மஞ்சள் நிறத்தில் காணப்படும். இத்தகைய பயிா்களுக்கு, ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ சிங் சல்பேட்டை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும்.

மேலும், 1 கிலோ சூடோமோனாஸ் மருந்தை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள நெற்பயிா்களில், நீரை வடிகட்டிய உடன் மகசூல் இழப்பிலிருந்து பயிா்களை காப்பாற்ற ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை, 10 லிட்டா் தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை வடித்து, தெளிந்த நீருடன் 2 கிலோ யூரியா மற்றும் 1 கிலோ பொட்டாஷ் உரத்தையும் சோ்த்து 190 லிட்டா் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்க வேண்டும் என்றாா்.