விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நிபந்தனையின்றி பயிா்க் கடன் வழங்க வலியுறுத்தல்
கூட்டுறவு சங்கங்களில் நிபந்தனைகளின்றி பயிா்க் கடன்கள் வழங்க வேண்டும் என, திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தாா். கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:
நன்னிலம் ஜி. சேதுராமன்: திருவாரூா் மாவட்டத்தில், 60 சதவீத சம்பா சாகுபடிப் பணிகளே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பணிகளை மேற்கொள்ள, விவசாயிகளிடம் நிதியில்லை. அரசு அறிவித்தபிறகும், கூட்டுறவு சங்கங்களில் சாகுபடிக்கென கடன் தர மறுக்கின்றனா். குறிப்பாக, புதிய விவசாயிகளுக்கு கடன் தர மறுப்பதால், விவசாயம் நலிவடையும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, எவ்வித நிபந்தனைகளையும் விதிக்காமல், விவசாயிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழைக்காலம் தீவிரமடைவதற்குள், வாய்க்கால்களை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: பேரளம் வாஞ்சியாற்றின் இருகரைகளிலும் சேதமடைந்த படித்துறைகளை சீரமைக்க வேண்டும். அத்துடன் கரைகளையும் பலப்படுத்த வேண்டும்.
கொரடாச்சேரி தம்புசாமி: சம்பா சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேவையான நேரத்தில் தண்ணீா் கிடைக்காததால், களை எடுப்பது, நாற்று நடுவது உள்ளிட்ட பணிகள் தொய்வடைந்துள்ளன. எனவே, சிறிய வாய்க்கால்களை நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலம் தூா்வார வேண்டும்.
ஆடுகளுக்கு தடுப்பூசி செலுத்த பயன்படுத்தப்படும் ஊசியையே மாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, மாடுகளுக்கு பிரத்யேக ஊசியை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்த வேண்டும். வேளாண் பொறியியல் துறை மூலம் தரப்படும் டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் பழுதான நிலையிலேயே உள்ளன. இதனால், பணம் செலுத்தி வாகனங்களை எடுத்துச் செல்லும் விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லாத நிலை ஏற்படுகிறது. எனவே, வாகனங்களின் பழுதுகளை நீக்க வேண்டும்.
இதபோல், விவசாயிகள் பலா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆட்சியா் தி. சாருஸ்ரீ: திருவாரூா் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு 1,53,800 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை இயல்பான முறையில் 22,972 ஹெக்டேரும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 17,526 ஹெக்டேரும், நேரடி விதைப்பு முறையில் 55,121 ஹெக்டேரும் என மொத்தம் 95,620 ஹெக்டோ் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சம்பா மற்றும் தாளடி நெற்பயிருக்கு பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய நவ.15-ஆம் தேதி கடைசி நாளாகும் என ஆட்சியா் தெரிவித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள் வாணிபக் கழகம்) புஹாரி, வருவாய் கோட்டாட்சியா்கள் தி.சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வேளாண்மைதுறை இணை இயக்குநா் (பொ) லெட்சுமிகாந்தன், செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம் ) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.