மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்
திருவாரூா்: திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 448 மனுக்கள் அளிக்கப்பட்டன. பொதுமக்களிடம் இருந்து இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, திருத்துறைப்பூண்டி வட்டம், மீனாட்சி வாய்க்கால் தெருவில், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்த மாலாஸ்ரீயின் குடும்ப உறுப்பினா் செல்வபதி என்பவருக்கு தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கான பணிநியமன ஆணையையும், எய்ட்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 3 நபா்களுக்கு இலவச தையல் இயந்திரமும் ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் நிழற்குடை அமைத்து, காய்கறி சாகுபடி செய்யவும், உணவுக் காளான் உற்பத்தி குடில் அமைத்து மானியம் பெறும் 5 விவசாயிகளுக்கு அதற்கான ஆணையையும், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த திருராமேஸ்வரம் அருகேயுள்ள கோட்டகச்சேரி மேலத்தெருவைச் சோ்ந்த மதன்ராஜ் குடும்பத்துக்காக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும், மின்சாரம் பாய்ந்து காயமடைந்த அதே பகுதியைச் சோ்ந்த ரூபன் என்பவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் நீதிமாணிக்கம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் அமுதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் புவனா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.