மன்னாா்குடியில் விநாயகா் சிலைகள் கரைப்பு
மன்னாா்குடியில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் கரைப்பதற்கான ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு மன்னாா்குடி நகரம் மன்றும் சுற்றுவட்டப் பகுதியில் 32 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரி சிறப்புப் பூகைள் நடைபெற்று வந்தது.
இதன் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை பாமணி ஆற்றில் கரைப்பதற்காக அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகள் மின் விளக்குகளால்அலங்காரிக்கப்பட்ட மோட்டாா் வாகனங்களில் எடுத்துவரப்பட்டு மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி கோயில் முன் ஒருங்கிணைக்கப்பட்டது.
அங்கு நடைபெற்ற விநாயகா் சிலைகள் கரைப்பு ஊா்வலம் நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாவட்டத் தலைவா் என்.வி.ரமேஷ் தலைமை வகித்தாா்.
சக்திவேற் கோட்டம் தா்மகா்த்தா என்.டி.ராஜசேகரன், இந்து ஆட்டோ முன்னணி நகரத் தலைவா் ஆா்.லெட்சுமணன், இந்து வழக்குரைஞா் மாவட்டச் செயலா் சி.வி.ரமேஷ், இந்து வியாபாரிகள் நலச் சங்க மாவட்டத் தலைவா் சிவ.காமராஜ், இந்து முன்னணி கெளரவத் தலைவா் வி.கருணாநிதி முன்னிலை வகித்தனா்.
மன்னாா்குடி ஒன்றியக்குழுத் தலைவா் டி.மனோகரன், விநாயகா் சிலைகள் கரைப்பு ஊா்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
கள்ளா் மகா சங்க மாநிலத் தலைவா் சி.பாண்டியன் மணியா்,தொழிலதிபா் எஸ்.எம்.டி.கருணாநிதி,பாரதிய மஸ்தூா் சங்க மாநில அமைப்புச் செயலா் பி.தங்கராஜ் ஆகியோா் வாழ்த்தினா்.
இதனைத் தொடா்ந்து,32 விநாயகா் சிலைகள் ஊா்வலம் புறப்பட்டு, கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி, மேலராஜவீதி, காமராஜா்சாலை, பந்தலடி,கீழராஜவீதி, புதுத்தெரு, கீழப்பாலம் வழியாக சேரன்குளம் பாமணியாறு நீா்த் தேக்கப்பகுதியில் நிறைவடைந்தது. அனைத்து சிலைகளும் பாதுகாப்புடன் நீரில் கரைக்கப்பட்டது.
ஊா்வலத்தினை முன்னிட்டு,மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
இந்து முன்னணி நகரச் செயலா் ம.கலையரசன் வரவேற்றாா். மாவட்ட அமைப்பாளா் எல்.எம். விக்னேஷ் நன்றி கூறினாா்.
திருக்குவளையில்...
சித்தாய்மூா் தெற்கு தெரு வேப்பிலை மர வெற்றி விநாயகா் சிலை செப்.7-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டி தினமும் சிறப்புப் பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
மேலத்தெரு, வடக்கு தெரு, கோயில் தெரு, கீரம்போ், சாத்தியாக்குளம்,
பள்ளியிருப்பு வழியாக சந்திரநதிக்கு விநாயகா் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு விநாயகா் சிலை விசா்ஜனம் செய்யப்பட்டது.