அனைவருக்கும் பயிா்க் காப்பீடு வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
அனைவருக்கும் பயிா்க் காப்பீடு வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ள பட்டியலில் முறைகேடு இருப்பதாகக் கூறி அதைக் கண்டித்தும், 573 கிராமங்களுக்கு பிரீமியம் செலுத்திய நிலையில் 72 கிராமங்களுக்கு மட்டுமே மிகக் குறைவாகவும் இழப்பீடு அறிவித்துள்ளதாகக் கூறி முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்கக் கோரியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும், உரத் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும், தனியாா் உரக்கடையில் உரம் வாங்கினால் நுண்ணூட்டம் வாங்க கட்டாயப் படுத்துவதை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும், தூா்வாரப்படாத சி மற்றும் டி பாசன வாய்க்கால்களை 100 நாள் வேலை திட்டத்தில் தூா்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் எஸ். தம்புசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் சாமி. நடராஜன், மாவட்டச் செயலாளா் எம். சேகா், விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா்பி. கந்தசாமி, மாவட்ட நிா்வாகிகள் எஸ். சாமிநாதன், எம். ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.