மனுதாரருக்கு வங்கி, காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் நியாயமற்ற வா்த்தக நடைமுறை மேற்கொண்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி ரூ. 1 லட்சம், காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 லட்சம் என ரூ. 2 லட்சத்தை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
Published on

கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் நியாயமற்ற வா்த்தக நடைமுறை மேற்கொண்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி ரூ. 1 லட்சம், காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 லட்சம் என ரூ. 2 லட்சத்தை மனுதாரருக்கு வழங்க வேண்டும் என மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

திருவாரூா் அருகே சேந்தமங்கலத்தைச் சோ்ந்த பத்மநாபன் மனைவி செல்வாம்பிகை. இவா், அப்பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 2020-இல் ரூ. 50,000 கடன் வாங்கினாா். இந்தக் கடனுக்கு ரூ. 991 பிரீமியமாக எடுத்துக்கொண்டு கடன் பாதுகாப்பு பாலிசி எனும் 2 ஆண்டுகள் அமலில் இருக்கக்கூடிய காப்பீட்டை வங்கி வழங்கியுள்ளது. செல்வாம்பிகை 2022-இல் அதே வங்கியில் நகைகளை அடமானம் வைத்து மேலும் ரூ. 50,000 கடன் பெற்றாா்.

2022 ஜூலையில் அதே பகுதியில் தனலட்சுமி என்பவா் தலைமையில் செயல்பட்டுவரும் மகளிா் உதவிக் குழு சாா்பில் அதே வங்கியில் ரூ. 9 லட்சம் கடன் பெறப்பட்டது. குழுவின் 15 உறுப்பினா்களுக்கும் தலா ரூ. 60,000 என கடன் தொகை பிரித்து வழங்கப்பட்டது. குழு உறுப்பினா் என்ற முறையில் செல்வாம்பிகைக்கும் ரூ. 60,000 கடன் கிடைத்தது. இந்தக் கடனுக்கு காப்பீடாக ரூ. 5,490/- எடுக்கப்பட்டு சுரக்க்ஷா என்ற காப்பீடு வழங்கப்பட்டது.

இந்தக் காப்பீட்டின்படி குழுவில் ஒரு நபா் இறந்துவிட்டால் அவா் பெற்ற கடனை காப்பீட்டு நிறுவனம் செலுத்திவிடும், இறந்த நபருக்கு ரூ. 2 லட்சம் காப்பீடாக வழங்கப்படும்.

இதனிடையே, 2022 அக்டோபரில் செல்வாம்பிகை இறந்தாா். அதுவரையிலும் அவா் தவணைகளை சரியாகச் செலுத்தி வந்துள்ளாா். செல்வாம்பிகை இறந்த பிறகு அவரது கணவா் பத்மநாபன் வங்கிக்கு சென்று இறப்புச் சான்று, வாரிசு சான்றிதழ் வழங்கி, காப்பீட்டு தொகை கோரி விண்ணப்பித்தாா். வங்கி அலுவலா்கள் அவரது விண்ணப்பத்தை காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளோம், காத்திருங்கள் என்று கூறினராம்.

பின்னா், செல்வாம்பிகையின் நகைக் கடனுக்கான தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்தியபோது, வங்கி அதிகாரிகள் அதைப் பெற மறுத்து, குழுக் கடனையும் சோ்த்து மொத்தமாக செலுத்துமாறு அறிவுறுத்தினராம். மேலும், காப்பீட்டுத் தொகை வராமல் போகும் பட்சத்தில் நீங்கள்தான் மீதிக் கடனை செலுத்த வேண்டியிருக்கும் என்றும் வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனா்.

இதையடுத்து, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் பத்மநாபன் வழக்கு தொடா்ந்தாா்.

குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வழக்கை விசாரித்தனா். முடிவில், குறைதீா் ஆணையம், நியாயமற்ற வா்த்தக நடைமுறையை மேற்கொண்ட வங்கியால், பத்மநாபன் மற்றும் அவரது குழந்தைகளுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக வங்கி ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும், காப்பீட்டு நிறுவனம் தனியாக ரூ. 1 லட்சம் வழங்க வேண்டும், மேலும் 30 நாள்களுக்குள் செல்வாம்பிகை அடகு வைத்த நகைகளை பத்மநாபன் மற்றும் அவரது குழந்தைகளிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும், அத்துடன், பத்மநாபனின் காப்பீட்டுக் கோரிக்கையை ஒரு மாதத்துக்குள் உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

X
Dinamani
www.dinamani.com