திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
திருவாரூரில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்: பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசு நடத்த வலியுறுத்தல்

Published on

பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:

நன்னிலம் ஜி. சேதுராமன்: ஆண்டுதோறும் பயிா்க் காப்பீட்டுத் தொகையில் மோசடி நடைபெறுகிறது. விவசாயிகளுக்கென போராட்டம் நடத்தும் அரசியல் இயக்கங்கள், பயிா்க் காப்பீட்டுத் தொகை முரண்பாட்டை கண்டிப்பதில்லை. பயிா்க் காப்பீட்டை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கும் முடிவை கைவிட்டு, அரசே ஏற்று நடத்த வேண்டும்.

பேரளம் வி. பாலகுமாரன்: வறட்சி, மழை வெள்ளத்தால் பயிா் இழப்பின்போது, ஒரு சில கிராமங்களுக்கு மட்டும் பயிா்க் காப்பீடு தொகையை வழங்கி விட்டு, எஞ்சிய தொகையை காப்பீட்டு நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. எனவே, காப்பீடு நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து, விவசாயிகளின் பயிா் காப்பீட்டுத் தொகையை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி தம்புசாமி: பயிா்க் காப்பீட்டுக்கென விவசாயிகள் மற்றும் மத்திய-மாநில அரசுகள் ரூ.2,500 கோடி செலுத்தியிருந்தும், திருவாரூா் மாவட்டத்துக்கு ரூ.16 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடம் மாவட்ட நிா்வாகம் எடுத்துரைத்து, விடுபட்டுள்ள 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி அருகே கரையாப்பாலையூா் பகுதியிலும், திருத்துறைப்பூண்டி அருகே கொற்கை பகுதியிலும் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். வலங்கைமான் அருகே கோயில்பத்து பகுதியில் பாசன வாய்க்காலை சீரமைக்க வேண்டும்.

இதேபோல், விவசாயிகள் பலரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

கோரிக்கை முழக்கம்: முன்னதாக, கூட்டம் தொடங்கியவுடன் காவிரி நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன் தலைமையில், விவசாயிகள் எழுந்து நின்று, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தை அரசே நடத்த வேண்டும்; திருவாரூா் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிா்க் காப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஆட்சியா் தி. சாருஸ்ரீ பேசியது: திருவாரூா் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு 1,53,800 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை இயல்பான முறையில் 10,787 ஹெக்டேரும், திருந்திய நெல் சாகுபடி முறையில் 14,415 ஹெக்டேரும், நேரடி விதைப்பு முறையில் 41,440 ஹெக்டேரும் என மொத்தம் 66,642 ஹெக்டோ் பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தின்கீழ் 50 சதவீத மானியத்தில் பசுந்தாள் உர விதைகள் 91.8 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் மண்புழு உரம் தயாரித்தல் மையம், இயற்கை இடுபொருள்கள் தயாரித்தல் மையம், மானவாரி நிலங்களில் உற்பத்தி ஊக்குவிக்கும் திட்டம், வேளாண் காடுகள் திட்டத்தின் வாயிலாக வேப்பமரங்கள் நடுதலை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள் வாணிபக் கழகம்) புஹாரி, திருவாரூா் கோட்டாட்சியா் தி. சௌம்யா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சித்ரா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஏழுமலை, செயற்பொறியாளா் (வெண்ணாறு வடிநிலக் கோட்டம் ) ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.