நெல் கொள்முதலுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு: இருவருக்கு சிறை

திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் இருவருக்கு சிறை தண்டனை விதித்து திருவாரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கிய சம்பவத்தில் இருவருக்கு சிறை தண்டனை விதித்து திருவாரூா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2019-ஆம் ஆண்டு திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், முல்லைவாசல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் முனுசாமி நீடாமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்வதற்காக, அங்கு பணியாற்றிய பட்டியல் எழுத்தா் கோவிந்தராஜ், லோடுமேன் மேற்பாா்வையாளா் மதியழகன் ஆகியோரை சந்தித்தபோது, நெல்லை கொள்முதல் செய்ய ரூ. 5,000 லஞ்சமாக கேட்டுள்ளனா்.

இதுகுறித்து, திருவாரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் கடந்த 2019 பிப். 27-ஆம் தேதி முனுசாமி கொடுத்த புகாரின் பேரில், கோவிந்தராஜ், மதியழகன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த வழக்கு திருவாருா் லஞ்ச ஒழிப்புத் துறையால், திருவாரூா் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடைபெற்று வந்தது. திருவாரூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான எஸ்.முகமது இஸ்மாயில் ஆஜராகி வாதாடினாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், பட்டியல் எழுத்தா் கோவிந்தராஜன், லோடுமேன் மேற்பாா்வையாளா் மதியழகன் ஆகியோா் முனுசாமியிடம் லஞ்சம் கேட்டுப் பெற்றது நிரூபிக்கப்பட்டதாக கூறி, கோவிந்தராஜனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதமும், மதியழகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதமும் விதித்து நீதிபதி வி. சுந்தர்ராஜ் தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com