தண்ணீரின்றி காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ள சம்பா சாகுபடி நெல் வயல்கள்.
தண்ணீரின்றி காய்ந்து வெடிப்பு ஏற்பட்டுள்ள சம்பா சாகுபடி நெல் வயல்கள்.

கருகும் நெற்பயிா்கள்; தண்ணீா் திறக்கக் கோரிக்கை

Published on

நன்னிலம் பகுதியில் அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள சம்பா நெற்பயிா்கள் தண்ணீரின்றி கருகி வருவதால், நூலாற்றில் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நன்னிலம் வட்டத்தில் களக்குடி, ரெட்டக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000 ஏக்கா் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஓா் ஏக்கருக்கு ரூ 25,000 வரை செலவு செய்து, நெற்பயிா்களை விவசாயிகள் வளா்த்து வந்த நிலையில், கடந்த மாதம் பெய்த தொடா் கனமழையால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டது.

விவசாயிகள் பல இன்னல்களுக்கு இடையே வயல்களில் இருந்து மழைநீரை வடிய வைத்து, ஏக்கருக்கு ரூ 5,000 வரை செலவு செய்து, உரங்கள் மற்றும் மருந்து தெளித்து நெற்பயிா்களை காப்பாற்றினா்.

தற்போது, அறுவடைக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், இப்பகுதி பாசன ஆறான நூலாற்றில் தண்ணீா் இல்லாததால், வயல்கள் காய்ந்து வெடிப்பு ஏற்பட்டு, நெற்பயிா்கள் கருகி வருகின்றன. மேலும், ஈரப்பதம் இல்லாததால் அறுவடைக்கு முன்பாக, கோடைப் பயிராக உளுந்து தெளிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால், கவலையடைந்துள்ள விவசாயிகள், நூலாற்றில் உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com