போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை
திருத்துறைப்பூண்டியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
மன்னாா்குடி கோட்டூா்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பக்ருதீன் மகன் அசாா் என்கிற ஜெகபா் சாதிக் (25). இவா், கடந்த 2020-இல் திருத்துறைப்பூண்டி பகுதியில் சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளாா். இதனால், சிறுமி கா்ப்பமானாா்.
இதையறிந்த சிறுமியின் பெற்றோா், திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், ஜெகபா்சாதிக் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த வழக்கு குறித்த விசாரணை, திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், ஜெகபா் சாதிக் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி ஜி. சரத்ராஜ் தீா்ப்பளித்தாா்.