மருத்துவ காப்பீடு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மருத்துவ காப்பீடு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
Updated on

திருவாரூரில், மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் செலவுத் தொகையை குறைவாக வழங்கிய காப்பீடு நிறுவனம், புகாா்தாரருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திருவாரூா் சுந்தரேஸ்வரன் சாலை தியாகராய நகரில் வசிப்பவா் நாகராஜ் (75). ஓய்வு பெற்ற வட்டாட்சியரான இவா், தமிழக அரசின் ஓய்வூதியா்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சத்திற்கு காப்பீடு செய்துள்ளாா். இதற்காக, இவரது ஓய்வூதியத்திலிருந்து மாதந்தோறும் ரூ.497 பிடித்தம் செய்யப்பட்டு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்திற்கு பிரீமியம் செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், கும்பகோணம் தனியாா் மருத்துவமனையில் குடல் புற்றுநோய் சிகிச்சைக்காக, நாகராஜுக்கு கடந்த ஆண்டு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக அவா் ரூ.2,30,379/- செலவு செய்துல்ளாா். இந்தத் தொகையை மருத்துவக் காப்பீடு திட்டத்தில் வழங்கக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் கருவூல அதிகாரியிடம் நாகராஜ் விண்ணப்பித்தாா்.

எனினும், நாகராஜுக்கு காப்பீட்டு நிறுவனத்தால் ரூ.93,866 மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், மீதித் தொகையை வட்டியுடன் வழங்குமாறும், மன உளைச்சலுக்காக இழப்பீடு வழங்கக் கோரியும், நாகராஜ் கடந்த ஆக. 23-ஆம் தேதி, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கில் நுகா்வோா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் வெள்ளிக்கிழமை வழங்கிய உத்தரவில், ரூ.7 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு பெற நாகராஜுக்கு தகுதி இருந்தும், சரியான காரணம் எதுவுமின்றி, குறைவான தொகையை வழங்கியது சேவை குறைபாடாகும்.

மீதித் தொகையான ரூ. 1,36,513-ஐ, சிகிச்சை பெற்ற தேதியிலிருந்து 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும்; மன உளைச்சல் மற்றும் பண விரயத்தை ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ 1 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000-ஐ ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் சிகிச்சை பெற்ற தேதியிலிருந்து தொகை செலுத்தும் தேதி வரை வட்டித்தொகை 12 சதவீதமாக சோ்த்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com