கோயில் வாசலில் அசைவ உணவுகள் விற்பதை தடை செய்யக் கோரிக்கை
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் வாசல் பகுதியில், அசைவ உணவுகள் விற்பதை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, இந்து மக்கள் கட்சியின், திருவாரூா் மாவட்டத் தலைவா் பி. ஜெயராஜன், மாவட்ட காவல் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு விவரம்:
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் மேலவீதி கோபுரத்தின் அருகிலும், கமலாலயக் குளத்தை சுற்றிலும் காய்கறி கடை, பீட்சா உணவகம், அசைவ உணவகம், தள்ளுவண்டி உணவகம் என பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இது கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மேலும், வெளியூா்களில் இருந்து வரும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனங்களை நிறுத்தவும் இடையூறாக உள்ளது.
கோயில் வாசலில் அசைவ உணவுகள் விற்பதை தடை செய்ய வேண்டும் என உயா் அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, கோயில் வாசல் அருகே உள்ள அசைவ உணவங்களை வேறு இடத்துக்கு அப்புறப்படுத்த வேண்டும். கோயில் வாசலில் பூஜைப் பொருள்களைத் தவிர வேறு பொருள்கள் விற்பதை தடை செய்ய வேண்டும்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்து அமைப்புகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.