தாலிக்கு தங்கம் வழங்கல்
திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் விதவை மகள், ஆதரவற்ற பெண், விதவை மறுமணம், கலப்பு திருமணம் ஆகிய திட்டங்களின்கீழ் தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினா். இதில், ஈ.வெ.ரா.மணியம்மையாா் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், டாக்டா் தா்மாம்பாள் அம்மையாா் நினைவு விதவை மறுமணம் மற்றும் டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி ஆகிய திருமண நிதியுதவி திட்டங்களின் கீழ் 8 கிராம் தங்க நாணயத்துடன் 143 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் திருமண நிதியுதவியும், 76 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் ரூ.25 ஆயிரம் திருமண நிதியுதவியும் என மொத்தம் 219 பயனாளிகளுக்கு ரூ.1,33,27,902 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், 68 பயனாளிகளுக்கு தலா ரூ.5,538 மதிப்பில் மொத்தம் ரூ.3,76,584 மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டன.
திருவாரூா் நகா்மன்றத் தலைவா் புவனப்பிரியா செந்தில், நகா்மன்ற துணைத்தலைவா் அகிலா சந்திரசேகா், சமூகநலத் துறை அலுவலா் மதிவதனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.