வடுவூரில் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட  கபடி வீரா் எம். அபினேஷ்.
வடுவூரில் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட கபடி வீரா் எம். அபினேஷ்.

ஆசிய கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம்: அபினேஷுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு

Published on

ஆசிய இளையோா் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீரா் எம். அபினேஷுக்கு, அவரது சொந்த ஊரான வடுவூரில் சனிக்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆசிய இளையோா் கபடி போட்டி பஹ்ரைனில் அக்.19 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், ஆடவா் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய அணி 35-க்கு 32 என்ற புள்ளி கணக்கில், ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இந்திய அணியில் வடுவூா் துரை.ஆசைத்தம்பி நினைவு எம்.எம்.சி. கபடிக் கழக வீரரான வடுவூா் மேல்பாதியை சோ்ந்த எம். அபினேஷ் இடம் பெற்றிருந்தாா்.

சென்னையில் முதல்வா் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அபினேஷுக்கு முதல்வா் ரூ. 25 லட்சம் ஊக்கத் தொகை வழங்கி பாராட்டினாா். முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி ரூ.1 லட்சம் வழங்கி பாராட்டினாா்.

இந்நிலையில், அபினேஷ் சொந்த ஊரான வடுவூா் மேல்பாதிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு, வடுவூா் பேருந்து நிறுத்தம் அருகே, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சால்வை, சந்தனமாலை அணிவித்து வரவேற்றாா். மேலும், பொது அமைப்புகள், சேவை சங்கங்கள், வடுவூா் மேல்நிலைப் பள்ளி, வா்த்தக சங்கம், கிராம அமைப்புகள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, வடுவூா் தன்னரசு நாடு என்ற அழைக்கப்படும் பகுதிகளின் வழியே வடுவூா் உள்விளையாட்டு அரங்கிற்கு அபினேஷ் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். அங்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், மாநில அமைச்சூா் கபடிக் கழகத் தலைவா் சோலை எம். ராஜா, மாநில பொதுச் செயலா் ஏ. சபியுல்லா, மாநிலப் பொருளாளா் ஏ. சண்முகம், மாநில அமைப்புச் செயலா் ராச.ராசேந்திரன், வடுவூா் விளையாட்டு அகாதெமி செயலா் ஆா். சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்று அபினேஷுக்கு பாராட்டுத் தெரிவித்து பேசினா்.

X
Dinamani
www.dinamani.com