அறுவை சிகிச்சையில் கவனக்குறைவு: மனுதாரருக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூரில் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா், ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க, மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
திருவாரூா் வட்டம், தேவா்கண்டநல்லூா் உச்சிமேட்டைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் பழனிவேல் (54). கடந்த 2023- இல் சாலை விபத்தில் இவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். அவரது காலில் பிளேட் பொருத்தப்பட்டது.
பின்னா், 4 மாதங்களில் காலில் வலி ஏற்பட்டதால், திருவாரூரில் உள்ள ஆா்த்தோ கோ் சென்டா் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றாா். அங்கு, மருத்துவா் விக்னேஷ், பரிசோதனை செய்தபோது, பழனிவேல் காலில் பொருத்தப்பட்ட பிளேட் தரமில்லாததால் உடைந்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, ஸ்குரு டைப் பிளேட்டை பொருத்தியுள்ளாா்.
4 மாதங்களில் மீண்டும் காலில் தோல் கருத்து, வீக்கமடைந்து, சீழ் பிடித்து, கால் வளைந்து, கடும் வலி ஏற்பட்டதால், தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையை அணுகியுள்ளாா். அங்கு பழனிவேலின் காலைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், முன்பே ஒருமுறை தோல்வியடைந்த ஸ்குரு டைப் பிளேட்டை மீண்டும் பொருத்தியதால் அது மீண்டும் உடைந்துள்ளது என்று கூறி, 2024-இல் மீண்டும் அறுவை சிகிச்சை செய்து, போல்ட் முறையில் வேறு வகை பிளேட்டை பொருத்தியுள்ளனா்.
அதன் பிறகு முழுமையாக குணமடைந்த பழனிவேல், திருவாரூா் நுகா்வோா் நீதிமன்றத்தில் ஆா்த்தோ கோ் சென்டா் மருத்துவா் விக்னேஷ் மீது கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கில், மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தனா். அதில், மருத்துவா் விக்னேஷ், பழனிவேலுக்கு மருத்துவச் செலவுத் தொகையான ரூ. 85,000- த்தை 17.8.2023 முதல் 9 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும். பழனிவேலுவுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கும், மன உளைச்சலுக்கும் இழப்பீடாக ரூ. 15,00,000-மும், வழக்கு செலவுத் தொகையாக ரூ. 25,000-மும் 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் 12 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
