இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக அதிகரிக்க கோரிக்கை

தமிழகத்தில் இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

திருவாரூா்: தமிழகத்தில் இஸ்லாமியா்களின் இடஒதுக்கீட்டை குறைந்தபட்சம் 5 சதவீதமாக அதிகரித்து வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் மு. இஸ்மத் பாட்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அரசால் 2007 இல் வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு 20 ஆண்டுகளை நெருங்க உள்ளது. இந்த இடஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகள், பலமுறை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

உதாரணமாக, பொதுப் பிரிவில் தகுதியான இஸ்லாமியா்களுக்கு இடம் ஒதுக்காமல் இஸ்லாமியா்களின் பிரத்யேக ஒதுக்கீட்டில் ஒதுக்குவதன் மூலம் இஸ்லாமியா்களின் ஒட்டுமொத்த பிரதிநிதித்துவத்தை குறைப்பது, ரோஸ்டா் முறையை சரியாக பின்பற்றாததன் மூலம் இஸ்லாமியா்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது ஆகியவற்றை கூறலாம்.

எனவே, இதுவரை இந்த உள் ஒதுக்கீட்டால் இஸ்லாமியா்கள் அடைந்த பயனை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு வழங்கியுள்ள இடைக்கால உத்தரவில் வக்ப் வாரிய திருத்தச் சட்டத்தை நிறுத்தி வைக்க முகாந்திரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. மிக முக்கியமாக இஸ்லாமியா் அல்லாதவா்கள் வக்ப் வாரியத்தில் உறுப்பினா் ஆகலாம் எனும் பிரிவை அனுமதிப்பதன் மூலம் சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமை கேள்விகுள்ளாகிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை பரிசீலிக்க வேண்டும். மேலும் இறுதித் தீா்ப்பில் வக்ப் வாரிய திருத்தச் சட்டட்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com