பள்ளி மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டி
கோட்டூா் ஒன்றியத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான இரண்டு நாள் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நிறைவு பெற்றது.
கோட்டூா் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரக் கல்வி அலுவலா் பி. விா்ஜின் ஜோனா தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் தெ. ராமசாமி, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள் ஆரோக்கியதாஸ், இந்திராகாந்தி ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா்.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை ஐந்து பிரிவுகளின்கீழ் பள்ளியளவில் முதலிடம் பெற்ற 1,154 மாணவா்கள், வட்டார அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனா்.
6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை செவ்வாய்க்கிழமையும் மற்ற வகுப்புகளுக்கு புதன்கிழமையும் போட்டிகள் நடைபெற்றன.
கலைத் திருவிழா போட்டிகள் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் தமிழ்நாட்டின் தொன்மைச் சிறப்பு, பாரம்பரியம், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், தனிநபா் நடிப்பு, பாவனை நடிப்பு, செவ்வியல் நடனம், நாட்டுப்புற நடனம், இசைக்கருவிகள் இசைத்தல், களிமண் சுதை, வேலைபாடுகள், மணல் ஓவியங்கள் ஆகிய போட்டிள் நடத்தப்பட்டன.
இசை ஆசிரியா் தினேஷ்குமாா், பேராசிரியா் ஜெயகாந்தன், நடன கலைஞா்கள், ஓவிய ஆசிரியா்கள் நடுவா்களாக செயல்பட்டனா்.
கலைத் திருவிழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

