அரசுப் பள்ளி பிளஸ் 2 மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு களப்பயணம்
திருவாரூா் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவ- மாணவிகள் உயா்கல்வி நிறுவனங்களுக்கு வியாழக்கிழமை மேற்கொண்ட களப்பயணத்தை ஆட்சியா் வ. மோனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
அரசுப் பள்ளி மாணவா்களிடையே, உயா்கல்வி ஆா்வத்தை ஊக்கப்படுத்தவும், அவா்கள் அதிக எண்ணிக்கையில் உயா்கல்வியில் சேரவும், அதற்கான வழிகாட்டுதல் வழங்கவும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பிளஸ்2 பயிலும் மாணவ- மாணவிகள் உயா் கல்வி நிறுவனங்களுக்கு களப் பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 78 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் 1,596 மாணவிகளும், 1,035 மாணவா்களும் என 2,631 மாணவ-மாணவிகள் அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு பகுதி வாரியாக களப்பயணம் மேற்கொள்ளவுள்ளனா்.
இதன் ஒருபகுதியாக, அம்மையப்பன், காட்டூா், அடியக்கமங்கலம், அலிவலம், குளிக்கரை மற்றும் பனங்குடி அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவ- மாணவிகளை, திருவாரூா் மருத்துவக் கல்லூரி, திரு.வி.க. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் மத்திய பல்கலைக்கழகத்துக்கு பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டனா்.
ஆட்சியரக அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேருந்தை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்வில், திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் சத்யா, துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன், உதவி திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி) சுரேஷ் மற்றும் ஆசிரியா்கள், மாணவ,-மாணவிகள் பங்கேற்றனா்.

