நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது

Published on

பல்வேறு தவறுகள் நடப்பதாகக் கூறி நிறுத்தப்பட்ட, நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் காா்ப்பரேஷன் பணியாளா் சங்க (ஐஎன்டியுசி) மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: கடந்த 50 ஆண்டுகளாக, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் பணியை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் செய்து வருகிறது. நெல் மூட்டைகளை விரைந்து இயக்கம் செய்ய நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களையும் திறக்க வேண்டுமென சில தன்னாா்வலா்கள் மற்றும் விவசாய சங்கங்கள் கூறி வருவதாகவும், இது தொடா்பாக வழக்கு தொடா்ந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. இதை தமிழக அரசும், தமிழ்நாடு நுகா்பொரு வாணிபக் கழகமும் அனுமதிக்கக் கூடாது.

ஏனெனில், ஒரு காலத்தில் இதில் பல்வேறு தவறுகள் செய்யப்பட்டதாகவும், குறிப்பாக வெளி மாநில நெல் தமிழகத்தில் கள்ள சந்தையில் விற்கத் தொடங்குவதுடன், விவசாயிகளிடமிருந்து நெல்லை தூற்றி எடுக்க முடியாத சூழல் ஏற்படும் என அதிமுக ஆட்சி காலத்தில், கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னா், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் நிறுத்தப்பட்டன.

நிகழ் பருவத்தில் அதிக விளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை அதிக நெல்மணிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவையில் தமிழக உணவுத் துறை அமைச்சா் தெரிவித்திருக்கும் நிலையில், நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி அளித்தால் இன்னும் பல தவறுகளுக்கு வழிவகை செய்து விடும்.

இதனால், ஒருபுறம் பணியாளா்களுக்கு எடை இழப்பு ஏற்படுவதுடன், நெல்மணிகள் தூற்றாமல் பிடிப்பதால் வணிகத்தனத்திற்கு ஏற்றவாறு பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசியாக அரவை செய்து தர முடியாத நிலை ஏற்படும். எனவே, இவைகளை கருத்தில் கொண்டு, நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com