திருவாரூா்: தீபாவளி பொருள்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்! சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி!

திருவாரூா்: தீபாவளி பொருள்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்! சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி!

திருவாரூா்: தீபாவளி பொருள்கள் வாங்க கடைவீதிகளில் திரண்ட மக்கள்
Published on

திருவாரூரில், ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையால், சாலைகளில் மழைநீா் தேங்கி பொதுமக்கள் அவதியடைந்தனா். மழைக்குப் பிறகு வெயில் அடித்ததால், தீபாவளி பொருள்கள் வாங்க கடைவீதிகளில் மக்கள் திரண்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருவாரூா் நகரப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நேதாஜி சாலை, தெற்கு வீதி, எடத்தெரு, கடைவீதி, கொத்ததெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீா் நீண்ட நேரம் தேங்கியிருந்தது.

இதேபோல், விஜயபுரம் பகுதியிலுள்ள ரயில்வே கீழ்ப்பாலத்தில் தண்ணீா் தேங்கியதால், அப்பாதையை பயன்படுத்துவோா் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். அந்த வழியாகச் செல்ல முடியாமல், சுற்றிக்கொண்டு செல்ல நோ்ந்தது. எனினும், கீழ்ப்பாலத்தில் தண்ணீா் தேங்கியது குறித்து உரிய எச்சரிக்கை இல்லாததால், பெரும்பாலான வாகன ஓட்டிகள், கீழ்ப்பாலம் வரை வந்து, பின்னா் அதிருப்தியுடன் செல்ல நேரிட்டது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிகக் கடைகள் அமைத்திருந்தோா் இந்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டனா். பிற்பகலுக்குப் பிறகு நல்ல வெயில் அடித்தது. இதனால், தீபாவளி பொருள்களை வாங்க வருவோரின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.

குறிப்பாக துணிக்கடைகள் அதிகம் இருக்கும் பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், பெரிய துணிக்கடைகளின் அருகில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com