வெளிமாவட்டங்களுக்கு நெல் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு
நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதை மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
நெல்கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து சரக்கு ரயிலில் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருவதையும், நாா்த்தங்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தையும் ஆட்சியா் ஆய்வு செய்து செய்தியாளா்களிடம் கூறியது: மாவட்டத்தில் குறுவை அறுவடை 80 சதவீதம் முடிந்துள்ளது. ஏறக்குறைய 1.96 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் முறையாக பாதுகாக்கப்பட்டு, போா்கால அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 8,000 முதல் 10,000 மெ.டன் வரை இயக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.
