புது தில்லி, ஜூலை 3: தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் லோதி எஸ்டேட் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் வழங்கிய நிதி மூலம் புனரமைக்கப்பட்ட மழலையர் வகுப்பறை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் தலைவர் சூர்யநாராயணன் தலைமை வகித்தார். கல்விக் கழகத்தின் செயலர் ஆர். ராஜு, பள்ளியின் முதுநிலை முதல்வர் வி. மைதிலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லோதி பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகச் செயலர் ஆர். முருகன் வரவேற்றார்.
இப்பள்ளியில் 1976-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.ஸ்ரீனிவாசன், புதுப்பிக்கப்பட்ட மழலையர் வகுப்பறையைத் திறந்துவைத்தார்.
சுமார் ரூ.3.80 லட்சம் செலவில் முற்றிலும் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த மழலையர் வகுப்பறையில் டி.வி., இசை ஒலிபரப்பு அமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இப்பள்ளியில் படித்த பலர் இன்றைக்கு உயர்ந்த நிலையில் உள்ளனர். எனது பெற்றோர், சகோதரர் கூட இந்தப் பள்ளியில்தான் படித்துள்ளனர்.
இப்பள்ளி எங்களுக்கு எவ்வளவோ செய்துள்ளது. ஆனால், பள்ளிக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை. அதனால், அதைத் திருப்பிச் செலுத்தும் வகையில் இதுபோன்ற உதவிகளை நானும், என்னைப் போன்ற முன்னாள் மாணவர்களும் செய்து வருகிறோம். மேலும், இப்பள்ளியில் மாணவர்களிடம் குறைந்த கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. நாங்கள் படிக்கும் காலங்களில் மாணவர்களுக்கு வசதி வாய்ப்புகள் அவ்வளவாக இல்லை. ஆனால், இன்றைக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. அதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார். பள்ளியின் முதுநிலை தலைமையாசிரியர் மைதிலி கூறியது: டிடிஇஏ பள்ளியில் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் உதவியுடன் மாணவர்களுக்கு கணினிக் கல்வியை அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
தில்லித் தமிழ்க் கல்விக் கழகச் செயலர் ஆர்.ராஜு கூறுகையில், பள்ளியில் மாணவர்களின் கல்வி கற்கும் திறனை அதிகரிக்கவும், பள்ளியின் உள்கட்டமைப்பு வசதியை அதிகரிக்கவும் முன்னாள் மாணவர்களின் ஒத்துழைப்புடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார்.
முன்னாள் மாணவர்கள் சங்கரி, ரவி, வெளியுறவு விவகாரத் துறையில் பணியாற்றும் ஸ்ரீனிவாசன், சுப்பிரமணியன், தினேஷ் ராஜா கோபாலன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியை எம்.குடிமணி மற்றும் டிடிஇஏ நிர்வாகிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.