புது தில்லி, ஜூலை, 3: "உடுப்பி' என்ற வார்த்தைக்கு தனி இலக்கணமே எழுதலாம் என்றால்... அது உணவுப் பதார்த்தங்களின் விதவிதமான சுவையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
பட்டுப்புடவை என்று சொன்னால் காஞ்சிபுரம் எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதேபோன்று தென்னிந்திய சைவ உணவு என்றால் கர்நாடக மாநிலம் உடுப்பியை மறக்க முடியுமா என்ன?
மசாலா தோசை, மிளகு ரசம், இட்லி, சாம்பார், வடை போன்ற தென்னிந்திய உணவு
வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஊர் உடுப்பி என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை!
இத்தகைய சிறப்பு மிக்க ஊரில் பிறந்து, பள்ளிப் படிப்பை முடிக்காவிட்டாலும்
சமையல் கலையின் திறம்கொண்டு தில்லியில் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு வளர்ந்து நிற்கிறார் ராவ் என்ற வி. ராமச்சந்திர ராவ்.
ஆம், தில்லி கரோல் பாக்கில் சிறியதாக கடை விரித்து, இன்றைக்கு 80 பேர் பணியாற்றும் பெரிய ஹோட்டலை நடத்தி வருகிறார் அவர். வாடிக்கையாளர்கள் விரும்பும் சுவையில் உணவு வகைகளை தரமாக வழங்குவதே தன் தொழில் வெற்றியின் ரகசியம் என்று கூறுகிறார் இவர்.
""1980-ம் ஆண்டு தில்லிக்கு குடும்பத்துடன் வந்தேன். முதலில் கரோல் பாக், ஆர்ய சமாஜ் ரோடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான கேண்டீனை நடத்தினேன். ஆக்ரா, தாஜ்மகால் போவோருக்கு உணவு தயாரித்து வழங்கினேன்.
பிறகு, கரோல் பாக் சரஸ்வதி மார்க் பகுதியில் உடுப்பி ஹோட்டலை ஆரம்பித்தேன். அப்போது சில ஹோட்டல்கள் மட்டுமே இப்பகுதியில் இருந்தன.
மசாலா தோசை, இட்லி, வடை, பொங்கல், சாம்பார் ஆகிய சுவையான தென்னிந்திய உணவுகளை வழங்கினேன்.
சுத்தம், சரியான விலை, சுவை ஆகியவற்றில் கவனம் செலுத்தினேன். வாடிக்கையாளர்கள் என் கடையை நோக்கி வரத் தொடங்கினர். ஹோட்டலும் வளரத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து முனிர்காவில் குருபிரசாத் உடுப்பி ஹோட்டலை 1985-ம் ஆண்டு தொடங்கினேன். இங்கு தென்னிந்திய உணவு வகைகள், வட இந்திய உணவுகள், சீன உணவு உள்பட 200 உணவு வகைகளை தயாரித்து வழங்குகிறோம்.
எங்களிடம் வரும் வாடிக்கையாளர்கள் எதை எதிர்பார்க்கின்றார்களோ அதைக் கொடுப்பது முக்கியம் என்பதை உணர்ந்துள்ளோம். பணம் பண்ணுவது மட்டுமே தொழில் வளர்ச்சிக்கு முக்கியமல்ல. தரமான சேவைதான் முக்கியம். அதில் நம்பிக்கை வைப்பதால்தான் நானும் வளர்கிறேன். என் தொழிலும் வளர்ந்து வருகிறது.
மேலும், ஹோட்டலுக்கு வருவோரை வாடிக்கையாளர்களாக நாங்கள் நினைப்பதில்லை. வீட்டுக்கு வரும் விருந்தினர்களாகத்தான் பார்க்கிறோம். அது வாடிக்கையாளர்களிடம் எங்களுக்கு நற்பெயரை ஏற்படச் செய்கிறது.
எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் அதில் ஒன்றிச் செயல்பட்டால் வெற்றி பெறுவது எளிதாகும். எதில் ஈடுபட்டாலும் என்ன கிடைக்கும் என்பதில் முன்கூட்டியே ஆர்வம் காட்டாமல் சிரத்தையுடன் காரியத்தில் ஈடுபட்டால் பலன் கிடைக்காமல் போகாது.
படித்துப் பட்டம் பெறுவது வாழ்க்கை வாழ்வதற்கு பணம் ஈட்ட உதவிடும். ஆனால், இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க அனுபவம்தான் கைகொடுக்கும். இது எனக்குக்
கிடைத்த பட்டறிவு.
இப்போது வாடிக்கையாளர்களின் வசதிக்காக கரோல் பாக் பகுதியிலேயே நவீன வசதிகளுடன் கூடிய ராகவேந்திரா உடுப்பி ஹோட்டலை விரைவில் தொடங்க உள்ளோம்.
நான் பிறந்தது உடுப்பி மாவட்டம் தந்தாபுரம் தாலுகா. சமையலுக்கு பெயர் பெற்ற உடுப்பி மாவட்டம் இன்றைக்கு காலமாற்றத்தால் ஐ.டி. உள்ளிட்ட வேறு தொழில்களை நோக்கி நகர்ந்தாலும் "சமையலுக்கு உடுப்பி' என்ற சொல் நாடு முழுவதும் பிரசித்தி பெற்றிருப்பது நான் பிறந்த மண்ணை நினைத்து பெருமை கொள்ளச் செய்வதாக உள்ளது
என்கிறார் ராவ்.
தோசை, ஊத்தப்பம்
பெற்றுத்தந்த சான்றிதழ்
""எங்களது குரு பிரசாத் உடுப்பி ஹோட்டலுக்கு "சிறந்த உடுப்பி ரெஸ்டாரண்ட் -2009' சான்றிதழை "பர்ப் டாட் காம்' என்ற நிறுவனம் வழங்கியுள்ளது. தோசை மற்றும் ஊத்தப்பம் உணவு வகைக்காக இந்த நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மசாலா தோசை, ஊத்தப்பம் ஆகியவை எங்கள் ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிச் சாப்பிடும் உணவுப் பதார்த்தங்களாகும்'' என்று பெருமிதத்துடன் ராவ் கூறினார்.