புது தில்லி, ஜூன் 3: தில்லி ராஜ்காட் மின் நிலைத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல டிரான்ஸ்பார்மர்கள் எரிந்து நாசமாகின.
மின் நிலையத்தில் இருந்து கரும் புகை வெளியாகியது. 25- க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
தீவிபத்து ஏற்பட்டதையடுத்து,ராஜ்காட் மின் நிலையம் தாற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் தில்லியின் பல பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
தில்லியின் ராஜ்காட் பகுதியில் அருகே உள்ள மின் நிலையத்தில் நிலக்கரியை உபயோகித்து 135 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் வடக்கு, மத்திய தில்லி பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜ்காட் மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது. பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மின் உற்பத்தியும் உடனடியாக நிறுத்தப்பட்டது.
காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அடுத்த டிரான்ஸ்பார்மரிலும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காணப்பட்டது. 25 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு அணைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு இயக்குநர் ஏ.கே. ஷர்மா கூறியது:
காலை 11.42 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். டிரானஸ்பார்மரில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவால்தான் தீவிபத்துக்கு ஏற்பட்டது என்று தெரிவித்தார்.
தில்லி மின் உற்பத்தி நிலையம் (டிரான்ஸ் கோ) செய்தித்தொடர்பாளர் கூறியது:
இந்த தீ விபத்து காரணமாக தில்லியில் மின் தடை ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்திப் பணிகள் காஷ்மீரி கேட், இந்திர பிரஸ்தா மின் நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். ராஜ்காட் மின் நிலையத்தில் தீ விபத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் தான மின் உற்பத்தி தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஏற்கெனவே தில்லியில் மின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பல இடங்களில் அவ்வப்போது மின் வெட்டு ஏற்படுகிறது. இப்போது மின் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் சம்பவத்தால் மேலும் மின் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரிகிறது.