பாகிஸ்தானின் கண்ணோட்டத்தில் மாற்றம்: நிருபமா ராவ்

புது தில்லி, ஜூலை 3: பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் எண்ணப்போக்கு மாறிவிட்டது. இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது என்று வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் குறிப்பிட்டார். தொலைக்காட்சிக்கு அளித்த பேட்
Published on
Updated on
2 min read

புது தில்லி, ஜூலை 3: பயங்கரவாதம் குறித்த பாகிஸ்தானின் எண்ணப்போக்கு மாறிவிட்டது. இத்தகைய மாற்றம் வரவேற்கத்தக்கது என்று வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது: இரு நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை உபயோகமானதாக இருந்தது. இரு நாடுகளிடையிலான உறவை பாதிக்கும் வெளி சக்திகள் குறித்து பேச்சு நடத்தப்பட்டது. பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பான இடமாக இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பிரச்னையைக் கவனிக்க வேண்டும் என்றும், போலி கரன்சி புழக்கம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இவை இரண்டுமே பாகிஸ்தானிடம் காணப்பட்ட மிக ஆரோக்கியமான போக்கை வெளிப்படுத்துவதாக இருந்தது. இருப்பினும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் வெளிப்படையாக பேசுவர் என தாம் எதிர்பார்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிகாகோ நீதிமன்றத்தில் டேவிட் கோல்மென் ஹெட்லி அளித்த வாக்குமூலத்தில் பயங்கரவாத அமைப்புகளுடன் ஐஎஸ்ஐ-க்கு தொடர்புள்ளது பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீர் நேரடியாக எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் புலனாய்வு அமைப்புகள், ராணுவம் ஆகியவற்றுடன் பயங்கரவாத அமைப்புகளுக்கு உள்ள தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட வேண்டும் என இந்திய தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் இதுகுறித்து சல்மான் பஷீர் விரிவாகப் பேசவில்லை. மேலும் வெளியுறவுச் செயலர் இதுகுறித்து பேசுவது சாத்தியமற்றது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. இருப்பினும் டேவிட் கோல்மென் ஹெட்லி குறிப்பிட்ட விஷயங்கள் குறித்து இந்தியாவுக்கு தெளிவான பதில் தேவை என சல்மான் பஷீரிடம் தான் திட்டவட்டமாகக் கூறியதாக நிருபமா ராவ் தெரிவித்தார்.

உண்மையில் இந்த பிராந்தியத்தில் நிலவும் பயங்கரவாதம், அதன் பரிணாமம், பயங்கரவாதத்தின் தீவிரம் இப்பிராந்தியத்தையே பாதிக்கும் அவலம் ஆகியவை குறித்து பாகிஸ்தான் நன்கு உணர்ந்துள்ளது. இதுவே நல்ல முன்னேற்றமான அறிகுறியாகும். ஆனால் இதுகுறித்து ஆலோசனைகளை வெளியுறவுத்துறையால் அளிக்க முடியாது. அது இரு நாடுகளிடையிலான உறவை மேம்படுத்த சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் நிருபமா ராவ் கூறினார். மேலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உள்ள சிக்கல்களை இந்தியா நன்கு உணர்ந்துள்ளது என்றார் நிருபமா ராவ்.

சல்மான் பஷீருடனான பேச்சுவார்த்தையின்போது மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அதிகம் விவாதிக்கவில்லை. எனினும், இப்பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவது குறித்து விவாதித்ததாக அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் பிரச்னையும் தங்களது பேச்சில் இடம்பெற்றதாக ராவ் சொன்னார்.

மும்பை தாக்குதல் சம்பவ வழக்கு விசாரணை விவரங்களை பாகிஸ்தானுக்கு தொடர்ந்து அனுப்பி வருவதாகக் குறிப்பிட்ட நிருபமா, இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தி வருவதாகவும் சொன்னார். இருந்தபோதிலும் பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை குறைந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். மும்பை தாக்குதல் சம்பவ வழக்கு விசாரணையில் உறுதியான நடவடிக்கை எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், அதற்காக பேச்சுவார்த்தை வேண்டாம் என விட்டுவிடுவது சரியான தீர்வாக இருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

அனைத்து அணுகுமுறைகளையும் லாப, நஷ்ட கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப கொள்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். எந்த பிரச்னைகளால் இரு நாடுகள் இடையிலும் பிரிவு ஏற்பட்டதோ அதே பிரச்னைகளை பேசித் தீர்வு காண வேண்டும். அவ்விதம் பேச்சு நடத்துவதன் மூலம் இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை அதிகரிக்கும். இதையே இரு நாட்டு பிரதமர்களும் உணர்ந்துள்ளனர். இவர்களின் அணுகுமுறையும் வரவேற்கத்தக்கதாகும் என்றார் நிருபமா.

மும்பை தாக்குதல் சம்பவ வழக்கு விசாரணையில் ஒரு அங்குல அளவுக்குக் கூட முன்னேற்றம் இல்லை என்று உள்துறைச் செயலர் ஜி.கே. பிள்ளை குறிப்பிட்டிருப்பது குறித்து கேட்டதற்கு, ஒரு கோணத்திலிருந்து பார்த்தால் ஒரு அங்குல முன்னேற்றம் கூட இல்லை என்பது உண்மைதான்.

இருப்பினும் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே நிலவும் அனைத்து பிரச்னை குறித்தும் பேச முன்வந்தது வரவேற்கத்தக்க விஷயம் என்று நிருபமா ராவ் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.