புது தில்லி, ஜூலை 3: நாடு முழுவதும் உள்ள விமானிகளுக்கான பிரபல பயிற்சி நிறுவனங்களுக்கும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் விமானம் ஓட்டும் பயிற்சி பெற்றதாக போலிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறித்து பிரச்னை எழுந்தது. அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் உள்ள விமானிகளுக்கான பயிற்சி நிலையங்கள் குறித்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், மும்பையில் உள்ள பாம்பே ஃபிளையிங் கிளப், 1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சென்னை ஃபிளையிங் கிளப், நாகபுரி ஃபிளையிங் கிளப், சென்னையில் உள்ள ஓரியன்ட் ஃபிளையிங் ஸ்க்கூல், ஆமதாபாத் ஏவியேஷன் அண்ட் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், அரசு ஃபிளையிங் ட்ரைனிங் ஸ்கூல் (பெங்களூர்) ஆகிய நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சில விமானிகளுக்கான பயிற்சி நிறுவனங்கள் வழங்கிய போலியான சான்றிதழ்களை வைத்து பலர் பல்வேறு விமான நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இவ்வாறு போலியாக 14 பேர் உரிமம் பெற்று விமானம் ஓட்டியதும் தெரியவந்தது. இதை அடுத்து அந்த சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டன.
இதை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 40 பயிற்சி நிறுவனங்களில் 18 நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனைகளில் பல பயிற்சி நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்தது தெரியவந்தது என்று விமானப் போக்குவரத்து இயக்குநர் கே. பாரத் பூஷண் கூறினார்.
அத்துடன் நீண்டகாலமாக நடத்தப்பட்டு வரும் பயிற்சிப் பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் பதில் திருப்தியாக இல்லாவிட்டாலோ, போதிய ஆவணங்கள் இல்லாமல் இருந்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முறையான அனுமதி பெற்று நடத்தப்படும் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று, 200 மணி நேரம் வானில் விமானம் ஓட்டி பறந்தால், விமானம் ஓட்ட உரிமம் வழங்கப்படும்.
போலி விமான ஓட்டும் உரிமம் வழங்கிய சில நிறுவனங்கள் இவ்வாறு குறிப்பிட்ட கால பயிற்சியை வழங்கவில்லை என்றும், சில நிறுவனங்கள் சொந்தமாக பயிற்சிக்கான விமானங்களை வைத்திருக்கவில்லை என்பதும் தெரியவந்தது.