புது தில்லி, ஜூலை 9: ஊழலுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை காரணமாகவே முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா சிறையில் இருக்கிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி எம்.பி. கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த நான்கு நாள்களாக பாதயாத்திரை மேற்கொண்ட அவர், கடைசி நாளான வெள்ளிக்கிழமை மாலையில் பஜ்னா என்ற கிராமத்தில் விவசாயிகளின் மத்தியில் பேசினார்.
ஊழல் விவகாரங்கள் தலையெடுக்கும் போதெல்லாம் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாகவே முன்னாள் அமைச்சர்கள்கூட இப்போது சிறையில் உள்ளனர். ஊழல் புகாருக்கு ஆளான ஆ. ராசாவும் மத்திய அரசின் நடவடிக்கை காரணமாகவே சிறையில் உள்ளார்.
இந்தச் சம்பவங்கள் மூலம், ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். ஊழல், லஞ்ச விவகாரங்களில் மத்திய அரசு துணிச்சலாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாகவும், அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு துணிச்சலாக மேற்கொண்டு வருவதாகவும் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்தார்.
விவசாயிகள் மாநாடு: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் காங்கிரஸ் கட்சி நடத்தும் விவசாயிகள் மாநாட்டுக்கு பெருந்திரளான விவசாயிகள் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர்.
மாநாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் பட்டா பர்செüலிலிருந்து மாநாடு நடைபெறும் அலிகர் வரை ராகுல் காந்தி கடந்த நான்கு நாள்களாக பாத யாத்திரை மேற்கொண்டதால், இந்த விவசாயிகள் மாநாட்டில் பெருந்திரளான விவசாயிகள் கடும் மழையையும் பொருட்படுத்தாமல் வந்திருந்தனர்.
பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் பலரும் வந்தவண்ணம் இருந்தனர்.
சல்மான் குர்ஷீத், சச்சின் பைலட், ஜிதின் பிரசாத் உள்ளிட்டோரும், மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரீட்டா பகுகுணாவும் காலையிலேயே விழா நடைபெறும் இடத்துக்கு வந்தனர். முன்தினம் பெய்த கன மழை காரணமாக மைதானத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தது. ராகுல் காந்தி பேசுவதற்காக நீர்புகா மேடை அமைக்கப்பட்டிருந்தது.