புது தில்லி, ஜூலை 9: தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டியில் தமிழக சிறுமியர் அணி மகாராஷ்டிரா அணியை 92- 60 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்று கால் இறுதிக்கு முன்னேறியது.
62- வது தேசிய ஜூனியர் கூடைப்பந்து போட்டிகள் தில்லி தியாகராய உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகின்றன. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 சிறுவர் அணிகளும், 25 சிறுமியர் அணிகளும் போட்டியில் பங்கேற்றுள்ளன.
தமிழக சிறுமியர் அணி: ஐந்தாவது நாள் ஆட்டத்தில் தமிழக சிறுவர் அணியும், மகாராஷ்டிரா அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே தமிழக அணி வீராங்கனைகள் புள்ளிகளை வேகமாகச் சேமித்தனர்.தமிழக அணியினரின் ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மகாராஷ்டிரா அணியினர் திகைத்தனர். தமிழக அணியைச் சேர்ந்த பிரியதர்ஷனி அதிகபட்சமாக 24 புள்ளிகளும் சுகன்யா 19 புள்ளிகளும் பெற்றனர். ஆட்டத்தின் இறுதியில் தமிழக அணி 92- 60 என்ற புள்ளிகளில் வென்றது. தமிழக சிறுமியர் அணியினர் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கர்நாடக சிறுவர் அணி: கர்நாடக சிறுவர் அணி பஞ்சாப் அணியுடன் மோதியது. இதில், கர்நாடக அணி 77- 98 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஞாயிற்றுக்கிழமை அரை கால் இறுதிப் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் தோல்வியுறும் அணிகள் நாக்-அவுட் முறையில் வெளியேற்றப்படும்.