புதுதில்லி, ஜூலை 9: இரவு வெகுநேரம் கழித்து பணி முடிக்கும் விமான பணிப்பெண்களை அலுவலக வாகனத்தில் மட்டுமே அவர்களது வீடுவரை கொண்டு விட வேண்டும் என விமான நிறுவனங்களுக்கு தில்லி போலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவினைக் கடுமையாக்கி இந்தப் புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு தெüலாகான் பகுதியில் அலுவலக வாகனத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட கால்சென்டர் பணியாளரான 30 வயதுடைய பெண்ணை 5 பேர் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தைத் தொடர்ந்து தில்லி போலீஸôர் பெண்களின் பாதுகாப்புக்காக சில உத்தரவுகளைப் பிறப்பித்தது.
ஆயினும் பழைய உத்தரவுப்படி, தனியார் வாகனங்களில் கொண்டு விடுவது சரிப்பட்டு வராது என கருதுவதால் அலுவலக வாகனத்தைப் பயன்படுத்தும்படி கறாராகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் இறக்கிவிடப்படும் விமான பணிப்பெண்கள் பத்திரமாக வீட்டுக்குள் சென்றுவிட்டோம் என சொன்ன பிறகுதான் அந்த வாகனத்தை அங்கிருந்து எடுத்து வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவாரகா பகுதியில் வசிக்கும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமான பணிப்பெண் ஒருவர், பணி முடிந்து வீடு திரும்ப பயன்படுத்திய காரின் ஓட்டுநர் தன்னிடம் அந்தக் காரில் தவறாக நடக்க முயன்றதாக சமீபத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து தில்லி போலீஸ் புது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இரவு நேரத்தில் டிரைவர் மட்டும் விமானப் பணிப்பெண்ணுடன் காரில் பயணம் செய்வதை அனுமதிக்கக்கூடாது.
பெண் ஊழியர்களை ஏற்றிச் செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் நன்கு அடையாளம் தெரிந்த செக்யூரிட்டி கார்டு ஒருவர் கட்டாயம் இருப்பதை மூத்த செக்யூரிட்டி அதிகாரி உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் எந்த அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் அதற்கு அந்த அதிகாரிதான் பொறுப்பேற்க வேண்டும்..
டிராப் வாகனத்தில் முதலில் ஏறுபவர் மற்றும் கடைசியாக இறக்குபவர் பெண் ஊழியராக இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றவகையில் பயணப் பாதைகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட வேண்டும்.
பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்காக இவை உள்ளிட்ட மொத்தம் 9 வழிகாட்டு நெறிமுறைகளை போலீஸôர் வகுத்துக் கொடுத்துள்ளனர். இவை மீறப்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம்தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
ஒவ்வொரு விமான நிறுவனமும் டிராப் வசதியைப் பயன்படுத்தும் விமானப் பணிப்பெண்கள், அவர்களுடன் யார், யார் பயணம் செய்தவர்கள் என்ற விவரங்களைக் கட்டாயம் கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களையும் உரிய முறையில் அடையாளம் கண்டு வாகனத்தில் ஏற்றி அனுப்ப வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தில்லி போலீஸின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜன் பகத் இந்த தகவலைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு நெறிமுறைகளைத் உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என பிபிஓ நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு ஏற்கெனவே தில்லி போலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தில்லி இந்திரா காந்தி சர்வ
தேச விமான நிலையம் அமைந்துள்ள பாலம் கிராம சப்-டிவிஷன் போலீஸ் அதிகார எல்லைக்குள் இந்த உத்தரவு அமலில் இருக்கும்.