புது தில்லி, ஜூலை 14: ஊக்கமருந்து விவகாரத்தில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக பாட்டியாலா தேசிய பயிற்சி மையத்தின் (என்.ஐ.எஸ்.) முன்னாள் மருத்துவ அதிகாரி டாக்டர் சஜிப் நந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தம்மிடம் வலுவான ஆதாரம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பயிற்சி மையத்துக்குச் சென்றார் சஜிப் நந்தி. அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவருக்கு அனுமதி மறுத்ததோடு, தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கானை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார் நந்தி. அப்போது தேசிய விளையாட்டு மையத்தில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (சாய்) அதிகாரிகளின் துணையோடு சட்டத்துக்கு புறம்பாக ஊக்கமருந்து பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சஜிப் நந்தி, செய்தியாளர்களிடம் கூறியது:
பாட்டியாலா தேசிய விளையாட்டு மையத்தில் அதிகாரிகளின் துணையோடு ஊக்கமருந்து பயன்படுத்தப்படுவது குறித்துஅமைச்சரிடம் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி முகுல் முட்கலிடம் அளிப்பதற்காக ஒரு அறிக்கை தயாரித்துள்ளேன். அதன் ஒரு பிரதியை அமைச்சரிடமும் அளித்துள்ளேன்.
இந்த விவகாரம் தொடர்பாக நான் அமைச்சரிடம் கூறிய விவரங்களை அவர் பொறுமையாகவும், கவனமாகவும் கேட்டறிந்தார். அது மகிழ்ச்சியாக உள்ளது. விளையாட்டுத் துறையில் ஊக்கமருந்து விவகாரம் பெரிதாகி வருவது குறித்து அமைச்சர் மிகுந்த வருத்தமடைந்துள்ளார். ஊக்கமருந்து இல்லாத விளையாட்டுத் துறை உருவாக்க வேண்டும் என அவர் விரும்புகிறார் என்றார்.
பாட்டியாலா பயிற்சி முகாமில் தான் தாக்கப்பட்டது குறித்துப் பேசிய நந்தி, பயிற்சி மையத்திற்கு விசாரணை நடத்த புதன்கிழமை வந்திருந்த விசாரணைக் குழு தலைவர் நீதிபதி முகுல் முட்கலிடம் ஊக்கமருந்து விவகாரம் தொடர்பான அறிக்கையை அளிக்க சென்றபோது பாதுகாப்பு அதிகாரி சிந்தர் பால் சிங் என்னை தாக்கினார். பயிற்சி மையத்தின் செயல் இயக்குநர் லட்சுமண் சிங் ரணவத்தின் உத்தரவின் பேரிலேயே, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
2002-ம் ஆண்டில் இருந்த ஊக்கமருந்து விவகாரத்தில் சாய் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறி வருகிறேன். ஆனால் ஒருபோதும் ரணவத்தின் பெயரை தெரிவித்ததில்லை. ஆனால் இப்போது சொல்கிறேன், அவருக்கும் ஊக்கமருந்து விவகாரத்தில் தொடர்பு உண்டு. மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள் அடங்கிய கும்பல் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உள்ளது என்றார்.
இந்த விவகாரத்தில் போதுமான ஆதாரங்கள் உங்களிடம் உள்ளதா என்று கேட்டபோது, வலுவான ஆதாரங்கள் இல்லாமல் புகார் கூறும் பழக்கம் என்னிடம் இல்லை.
ஆனால் அதை ஊடகங்களிடம் தெரிவிக்க முடியாது. ஆதாரங்களை நீதிபதி முகுலிடம் அளிப்பேன்.
இந்த விவகாரத்தில் நீதிபதி முகுல் சரியான அறிக்கையை தாக்கல் செய்வார் என்று நினைக்கிறேன்.
முகுலின் பரிந்துரையை ஏற்று அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சர் உறுதியளித்ததாக நந்தி தெரிவித்தார்.
ஊக்கமருந்து உட்கொண்டதாக தட கள வீரர், வீராங்கனைகள் 8 பேர் சிக்கியுள்ளனர். இது சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட வீரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பயிற்சியாளர்கள், அதிகாரிகளும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.