புது தில்லி, ஜூலை 14: சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடுவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று தில்லி போலீஸ் ஆணையர் பி.கே.குப்தா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் போலீஸ் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தில்லியின் அண்டை நகரங்களான ஃபரிதாபாத், குர்காவுன், பல்வால், சோனிபத், பானிபத், ரோத்தக் ஆகிய நகரங்களின் போலீஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மும்பை நகரில் புதன்கிழமை மாலை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பை அடுத்து அனைத்து மாநிலங்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக தில்லி போலீஸ் ஆணையர் பி.கே.குப்தா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் கிடைக்கும் தகவல்களை உடனடியாக அண்டை மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். "ஜிப் நெட்' கணினி தொழில்நுட்பம் மூலம் தகவல்களை மாநிலங்களுக்கு இடையே உடனடியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
நீண்ட நாள்களாக போலீஸôரால் தேடப்படும் குற்றவாளிகளை கைது செய்ய ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில எல்லையோரங்களில் இரு மாநில போலீஸôரும் இணைந்து கூட்டுச் சோதனை சாவடிகளை அமைக்க வேண்டும். சிறைச்சாலைகளில் இருந்து விடுதலையான குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தில்லி போலீஸôரால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் விவரங்கள் பிற மாநில போலீஸôருடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களில் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலையும் போலீஸ் அதிகாரிகள் மாதந்தோறும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சுதந்திர தின கொண்டாட்டங்களின்போது நாச வேலைகள் ஏதும் ஏற்படாமல் இருக்க தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கண்காணிப்பு தீவிரம்: "மும்பை சம்பவத்தை அடுத்து நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் துறை மூத்த அதிகாரிகள் நகரில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். நகர் முழுவதும் பரவலாக காவல் துறையினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்' என்று காவல் துறை மூத்த அதிகாரி வியாழக்கிழமை கூறினார்.
மெட்ரோ ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு: தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் காவலும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது என்று மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை அதிகாரி ரோஹித் கட்டியார் கூறினார்.