புது தில்லி, ஜூலை 14: தனியார் வங்கியில் கொள்ளையில் ஈடுபட முயன்றதாக 3 இளைஞர்களை போலீஸôர் கைது செய்தனர்.
நாத்து காலனி சௌக் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. புதன்கிழமை மாலை வழக்கம்போல் பணி முடிந்து அலுவலகத்தைப் பூட்டிச் செல்லும் பணியில் அதன் மேலாளர் சுநீல் தாகூர், சக பணியாளர் சுபாஷ் ராய் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 3 இளைஞர்கள் அலுவலகத்தில் நுழைந்து பணப் பெட்டகத்தின் சாவியைத் தரும்படிக் கூறி இருவரையும் துப்பாக்கியால் மிரட்டியுள்ளனர். அப்போது, வங்கியின் அலாரம் மணி ஒலிக்கவே அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.
வங்கிப் பணியாளர்கள் கூச்சலிடவே, அருகில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸôர்
அவர்கள் மூவரையும் விரட்டிப் பிடித்தனர்.
அவர்கள் மூவரும் அசோக் நகரைச் சேர்ந்த பாபி தாமர் (30), ஆங்கிட் மாலிக் (22), மேற்கு ஜோதி நகரைச் சேர்ந்த கமல் பஞ்சால் (22) என்பதும், வங்கியில் கொள்ளையிட முன்கூட்டியே நோட்டமிட்டுத் திட்டமிட்டதும் தெரியவந்தது.
இதில், கொள்ளைத் திட்டத்துக்குப் பின்புலமாக செயல்பட்ட பாபி தாமர், அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலையின்றி சுற்றித் திரிந்த அவர், தனது பணத் தேவைகளுக்காக இதுபோன்ற கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.
இதுகுறித்து மானசரோவர் பூங்கா போலீஸôர் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரு தோட்டாக்களுடன் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், கத்தி, திருட்டு மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.