புதுதில்லி, ஜூலை14: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனிடம் விசாரணை நடத்துவது என சிபிஐ முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. அவர் இப்போது புது தில்லியில் தங்கியுள்ளார்.
ஏர்செல் முன்னாள் அதிபர் சிவசங்கரனுக்கு அமைச்சர் நெருக்கடி கொடுத்ததாகக் கூறப்படும் புகார் குறித்துப் போதுமான ஆவணங்கள் சிபிஐ-க்கு கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் தயாநிதி மாறனிடம் ஜூலை 15-ம் தேதியில் இருந்து ஜூலை 20-ம் தேதிக்குள் விசாரணை நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சி.பி.ஐ. தரப்பிலிருந்து தயாநிதி மாறனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் ஒன்றை அனுப்புவதுடன் அவர் விசாரணைக்கு வருவதற்கான தேதியும் குறிப்பிடப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
வியாழக்கிழமை தயாநிதி மாறன் தில்லிக்கு வந்து தங்கியிருப்பது இந்த விசாரணையை எதிர்கொள்ளத்தான் என்றும் கூறப்படுகிறது.