புது தில்லி, ஜூலை 14: நொய்டாவில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் இம்மாதம் முதல் தேதி தொடங்கப்பட்டது. சுமார் 5 வட்சம் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
நொய்டா சிட்டி கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியை மேம்படுத்தும்போதும் அப்பகுதியில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
நொய்டாவில் மரங்கள் உள்ள பகுதி 23 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இதை 33 சதவிகிதமாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நொய்டா நகரிய நிர்வாகத்தின் தோட்டக்கலைப்பிரிவு துணை இயக்குநர் ராஜேந்திர சிங் தெரிவித்தார்.மரங்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள செக்டர்களில் வேம்பு, அதிக பூக்கள் பூக்கும் மரவகைகள் நடப்படவுள்ளன. சாலையோரங்கள், புதிதாக உருவாக்கப்படும் செக்டர்கள், மரங்களை வெட்டி மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவற்றில் மரக்கன்றுகள் நடப்படும்.
இரண்டு கட்டங்களாக இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. முதல் கட்டம் ஆகஸ்ட் மாத இறுதியில் நிறைவுபெறும். இதில் 70-க்கும் அதிகமான செக்டர்களில் மரக்கன்றுகள் நடப்படும். அதன் பின்னரே 2-ம் கட்டமாக மரங்கள் நடுவது தொடங்கப்படும்.இம்மாதம் முதல் வாரத்தில் 4, 14ஏ, 72, 34,105,108 ஆகிய செக்டர்களில் சுமார் 3000-க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன. செக்டர் 14 மற்றும் 72-ல் மரங்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பதால் அவற்றில் முறையே 12 ஆயிரம், 1500 மரக்கன்றுகள் நடப்பட்டன.
மரக்கன்றுகளை நட விரும்புபவர்கள் அவற்றை நகரிய நிர்வாகத்திடமிருந்து இலவசமாக வாங்க கட்டணமில்லாத தொலைபேசி சேவை தொடங்கப்படவுள்ளது என்றார் அவர்.